பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

37

வணக்கமும் கபாலிக சைவ மதமும் நமக்கொன்றும் புதியன அல்லவே. சம்போகத்தை வெறுத்த பாடல்களை எத்தனை ஆண்டிகளும் பண்டாரங்களும் பாடியிருக்கிறார்கள்! சாவு வேண்டும் சம்போகம் வேண்டாம் என்று பாடுவதற்கு என்ன இன்டெலெக்சுவலிசம் வேண்டிக் கிடக்கிறது?

கவிதையென்று பெயரிடப்பட்டிருக்கும் வேறு சில வரிகளை டி.கே. துரைசாமி எழுதியிருக்கிறார்.

கூட்டமாக அணிவகுத்து அசட்டுக் கருஞ்சிவப்பு நிறம் தாங்கி ரெளத்திரத் துளிகள்போல் தடுத்தோரைக் குதறித் தள்ளி அடுத்த நிமிஷம் சாவதற்கு விரையும் இக் கட்டெறும்புக் கூட்டத்தை நாமறிவோம்.

தனித்து நின்றாலும் சாவு, கூடிப் போராடினாலும் சாவு என்ற தமது தத்துவத்தை இப்படி உருவகமாக இவர் கூறுகிறாராம்.

படிமச்சிற்பி என வருணிக்கப்படும் தரும. சிவராமு சாவைப் பற்றி நீண்ட பாட்டொன்று எழுதியிருக்கிறார். பாரதியைவிட வருணனைத் திறனிலும் படிம நிர்மாணத்திலும் உயர்ந்தவர் என்று செல்லப்பாவால் அழைக்கப்படும் தரும, சிவராமு இறப்பு என்னும் தலைப்பில் சாவுக்குப் புகழ் பாடுகிறார்:

மணமடுத்த மஞ்சமா
மஞ்சமடுத்த துயிலா, உயிரா
கூண்டு தப்பிய கிளியா
கூடேகும் புள்ளா
கூடுதப்பிய புள்ளா
வலைபட்ட புறாவா
சூடப்பறித்த மலரா
வாடயெறிந்த மலரா
கிழியக் கழிந்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா
காற்றணைத்த சுடரா
செய்வினையா
செயப்பாட்டு வினையா
தொடர்கதையின் ஒரு பிரிவா
சிறுகதையின் முடிவா
காற்புள்ளியா
முற்றுப் புள்ளியா

?