பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நா. வானமாமலை

வாழ்வையும் சாவையும் பற்றி இவர்களது அகவயத் தத்துவங்கள் இவைதாம். உலக மறுப்பு, துறவு வேட்கை, உடலையும் இளமையையும் பழிப்பது, பெண்ணைப் பேயென்று ஏசுவது போன்ற கருக்கள், தற்கால-பிற்காலச் சமயக் கவிஞர்களது பாடல்களில் ஏராளமாக உள்ளன. புதிய மொந்தையில் பழைய கள்ளைத்தான் இவர் தருகிறார். “அகவுலகம் ஃபிராய்டிஸத்தினால் விசாலமடைகிறது” என்றும் “உன்னத்தைத் துழாவி இந்தக் கவிஞர்கள் ஏதோ புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள்” என்றும் சி. சு. செல்லப்பா சொல்லுகிறார். அக உலகம் விசாலப்பட்டதன் விளைவு என்ன? சாவு பற்றி ஒப்பாரி வைப்பதுதானா? வாழ்வும் சாவும் ஒன்று, “வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகு” என்ற தத்துவங்கள்தாம் புதிய உண்மைகளா?

பெண்ணும் இணை விழைச்சும்

இவ்வாறு வாழ்க்கையைச் சகித்துக் கொள்ளவேண்டிய துன்பம் நிறைந்த அனுபவமாகக் கருதும் இக்கவிஞர்கள் பெண்ணையும் இணைவிழைச்சையும் பற்றி என்ன சொல்கிறார்கள்?

மா. இளையபெருமான் எழுதிய முதல் கவியில் உமைபங்கனான சிவனை நோக்கி ஒரு கேள்வி கேட்கிறார்:

பெண் துரக்கிக் கதையெழுதிப்
பெண் தாக்கிப் பாட்டெழுதிப்
பெண் நோக்கும் வாழ்வென்ற
பேருண்மை நாட்டுதற்கோ
உன்மத்தா
ஒரு பாதி
பெண்ணாகி வாழ்கின்றாய்?

பெண்நோக்கே வாழ்வென்று இவர் கூறுகிறார். “வாழ்வின் அடிப்படை இன்ப நாட்டம், அது இணை விழைச்சுத் தன்மையுடையது என்ற” ஃபிராய்டின் கொள்கை இங்கே எதிரொலிக்கக் காணலாம். இவரை எதிர்த்து மற்றொரு புதுக்கவிஞர், காமம் ஒரு நோய் என்று பழைமைக் கருத்தை நினைவில்லாமல் கூறிவிடுகிறார்:

காமம்:
பலநோய் ஒரு மொழி
புற்று சோகை ஈளை