பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

39

இரத்த அழுத்தம் இன்னுமென்ன
உண்டோ, அத்தனை அத்தனையும்

காமத்துள் அடக்கம்.
(ப. 62, சி. மணி)

பேச்சு என்பதே காமத்தில் உதடுகள் புதைவதும் இரத்தம் அதிர்வதும்தான் என்று பாரதியைவிடப் பெரிய படிம நிர்மாணி தரும. சிவராமு எழுதுகிறார்:

பூவின் இதழ்ச்சுவருள்
வண்டு குரல் ஒலிகள்
மோதி மடிகிறது
முத்தத் திரைமறைவில்
பேச்சுப் புதைகிறது
ஆனால் ரத்தம் கதைக்கிறது

மவுனம் அதிர்கிறது.
(ப. 34, தரும, சிவராமு)


‘நரகம்’ என்ற நீண்ட புதுக்கவிதையைச் செல்லப்பா ‘தாரை’க்கு உதாரணமாகச் சொல்கிறார். காலம் என்பது கணப்பொழுதுகளால் ஆன கடந்த, நிகழும், வரும் கணப் பொழுதுகளின் தொடர்ச்சியே. உள்ளத்தில் கணப்பொழுது தோன்றி மறைந்துவிடும் எண்ணற்ற எண்ணங்களின் தொடர்ச்சிதான் உணர்வுத்தாரை (Stream of Consciousness). இந்த அனுபவத்தைச் சொல்ல முயலுவதே ‘நரகம்’. சென்னையிலுள்ள காட்சிகள், கவிஞன் மனத்தில் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கணத்திற்குக் கணம் ஏற்படுத்தின. இவை தனது மனத்தில் தொடங்கி வைத்த உணர்வுத் தாரையை இக்கவிதையில் ஒழுகவிடுகிறார் கவிஞர். அவர் எண்ணத்தில் புறக்காட்சிகளெல்லாம் காமத்தின் வெளியீடாகவே தோன்றுகின்றன. அருவருக்கத்தக்க காம விகாரத்தின் ஓடையொழுக்காகத்தான் இக்கவிஞரின் உள்ளத்தாரை இருக்கிறது. இங்கே காமத்தைக் கிண்ணத்தில் ஏந்தி வருபவள் நவீனப் பெண்.

பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் ஆண்களும் பெண்களும், பஸ் வந்தவுடன் மோதியடித்துக்கொண்டு ஏறுகிறார்கள். அப்பொழுது கவிஞரின் உள்ளத்தாரை பெருக்கெடுக்கிறது:

தானியங்கி வரவும்
சூடகத் தளிர்க்கை மாதரொடு
சிகரெட் பிடிகை மைந்தரும்
ஊடுற நெருக்கியேற
சேவலே முன்னென்போரும், இல்லை