பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நா. வானமாமலை

ஒரு மட்டம் உயர்வாகவும் சாதி ஏணியில் ஒருபடியாகவும் இருத்தல்வேண்டும்.

மணமகன், மணமகளது தனி இயல்புகள், அதாவது உருவம், ஆர்வங்கள், கனவுகள், கற்பனைகள், அறிவுத்திறன் இவை யாவும் முக்கியமான பொருத்தங்கள் அல்ல. அதாவது மனிதப் பண்புப் பொருத்தம் திருமணத்திற்கு முக்கியமான பொருத்தம் அல்ல. எனவே இயல்பான மனிதப் பொருத்தங்களான கனவுகள், கற்பனைகள், மனிதநேசம், காதல் எல்லாம் இளமையின் ஒளிமிக்க உள்ளக் கிளர்ச்சிகளாக இருந்து, அவற்றிற்கு இடமில்லாத சமுதாயத்தில் வேறு பொருத்தங்களுக்கு இடங்கொடுத்து வாடிப் போகின்றன.

இந்நிலையிலிருந்து முன்னுரையை முடிவுரையாக எழுதுகிறார் மீரா:

என் வேட்கையே
நீ இவ்வளவு தாமதமாக வந்து
இவ்வளவு விரைவாகப் புறப்பட்டு விட்டாயே!
நீ வந்தபோது இனிமேல்தான் என் வாழ்க்கை தொடங்கப் போகிறது என்று எண்ணினேன். ......நீயோ முடிவுரை
எழுத வந்திருக்கிறாய்.
என் வேதனை உன் விழிகளை நனைக்கிறது என் அந்தரங்கமே
இதோ உன் சொல்லோவியம்......
நம் உள்ளப் புணர்ச்சிக்குப் பிறந்த உயிரோவியம்......
உன் காலடியில் வைக்கிறேன்

உள்ளப்புணர்ச்சி மனித மதிப்புகளால் நிகழ்வது. உடல் புணர்ச்சியாம் திருமணப்பிணைப்பு மனித மதிப்பற்ற தற்காலச் சமூக மதிப்புகளால் நிகழ்வது. மனித மதிப்பு, சமூக மதிப்பால் மிதிபட்டுச் சாகிதது. நல்ல சோக கீதத்தோடுதான் சாகிறது.

இந்தச் சோககீதம் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது. ஹெலனுடைய வாழ்க்கையைப் போல, அன்னாகரினாவின் உள்ளத்துடிப்பு போல, ஜூலியத்தின் கீதத்தைப் போல, சகுந்தலையின் ஏமாற்றத்தைப் போல, இந்த மாபெரும் மனித சோகச் சுமையைத் தாங்கிக்கொண்டு முகவுரையான முடிவுரை பிறந்துவிட்டது.

பிறகு வாழ்க்கையின் மனிதத்தன்மை வெளியாகும் ஒரு குறுகிய காலத்தின் இன்பம், கிளர்ச்சி, ஒளி முதலியவற்றால் உடலும் உள்ளமும் தூண்டப்பட்டு, கனவு, கற்பனை ஏறிய