பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதிய போக்கு

71

கவிதைகளாக வெளிப்படுகின்றன. இது ஐந்தினை அல்லது ஏழுதிணை அகவொழுக்கமன்று. கனவும் கற்பனையும் உண்மையாகிவிடும் என்று நம்புகிற இளமை எழுச்சி, சமுதாய மதிப்புக்கள் என்ற தூக்குமரத்தைக் காண்பதில்லை.

இன்று வளர்ந்துள்ள அறிவுநிலையின் பரப்பு, இன்று முன்னேறியுள்ள மனித ஆற்றல் வரம்பு, சோசலிச அமைப்பு, மனித இயல்புகளைத் தாங்கும் விளைநிலமாகவும் மனித ஆற்றலின் விரைவூக்கியாகவும் இருப்பதை அறிந்த அறிவு, இவை யாவையும் கலந்து நனவுலக மொழிக் கோவைகளால் கவிதை ஊற்றாகப் பிறக்கிறது. உலகப் புதுக்கவிதை மரபு தரும் படிம உத்திகளால் கனவுகளையும் கற்பனைகளையும் சித்திரங்களாகவும் அகப்படிமங்களாகவும் ரசவாதம் செய்து மீரா அளிக்கும் புதுக்கவிதைகளின் தாக்கம் நமது ரசிகர்கள் உள்ளத்தில் இனிய மலர்களாக மலராமற் போகாது.

இளமைக் காதல் வேறொன்றையும் வேண்டாத ஒருமை புணர்ச்சியாக சில கணங்களாவது உண்மையாக நீடிக்கிற தல்லவா? வெறும் கானல் நீராக இல்லாமல், உள்ளத்தில் நிலையான பதிவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் மாபெரும் கிளர்ச்சியல்லவா!

காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்

என்று பாரதி பாடினார்.

இளமையில் அதுவே மனிதனை இயக்கு சக்தியாக அதனை அனுபவிப்பவருக்குத் தெரிகிறது. இந்த உணர்வு மின்னலையே மீரா இப்படிக் கூறுகிறார்.

மின்னல் இருளின் கனத்தைக் கிழிக்கும்பொழுதுதான் இருளின் அடர்த்தி நமக்குப் புரிகிறது. சுதந்திர வேட்கை கனன்று எரியத் தொடங்கும்பொழுதுதான் அடிமைத்தனத் தின் அசிங்கம் நமக்கு விளங்கத் தொடங்குகிறது. இதனைப் போலவேதான் காதல் என்னும் இனிய நீரோடை பாய்ந்த பின்னர்தான் இளைஞனுக்குத் தனது முந்திய வறண்ட வாழ்க்கையை அறிய முடிகிறது என்று கவிஞர் மீரா கூறுகிறார்:

நீ எனக்குத் தாகவெறி தந்தாய்
பிறகுதான்—
என் இதயம் வறண்ட நிலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது