பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையில் புதிய போக்கு

73

மாடமாளிகை
தென்னந்தோப்பு
அது இது என்று வேண்டி
இறுதியில் ஒரு பத்தினிப்பெண்ணைக் கேட்டான்
நான் கேட்டால்
உன்னை மட்டும்தான் கேட்பேன்
உன்னைப் பெற்றால்
உலகத்தில் உள்ள
எல்லாம் பெற்ற மாதிரித்தானே

காதலைப்பற்றிய நவீன சிந்தனைகளைத் தொல்காப்பியத்தில் காண்போர் உள்ளனர். வருங்காலமனைத்திற்கும் ஒரு காதலன் என்ன பேசவேண்டும் என்பதை அவர் சொல்லிவிட்டதாக வரலாற்றையும் வளர்ச்சியையும் அறியாதவர்கள் தொல்காப்பியர் காலத்திலேயே வாழ்ந்துவிட்டுப் போகட்டும், நாம் தொல்காப்பியர் காலத்திலோ, நம்பியகப்பொருள் ஆசிரியர் காலத்திலோ, பாட்டியல் காலத்திலோ வாழவில்லை. ஒன்றிற்குப் பின் ஒன்றாக அகப்பொருள் இலக்கணங்கள் தோன்றியதே. பிற்கால வாழ்க்கையில் புதிய உணர்ச்சிப் போக்குகளும் அவற்றின் வெளியீடுகளும் தோன்றியதற்கேற்பப் புதிய இலக்கண விதிகள் தோற்றுவிக்கப்படவேண்டிய அவசியம் நேர்ந்தது என்பதால்தானே!

தலைவன்தான் ஏற்றமுடையவன். அவனோடு ஊடினாலும், கற்பு அவளை அவனுக்குப் பணியச் செய்கிறது. ஆனால் பிரெஞ்சுப் புரட்சிக்கும் சோவியத் புரட்சிக்கும் பின்தோன்றிய சமத்துவம் என்னும் உயரிய கொள்கைக்காக மக்கள் புரட்சிகளை உருவாக்குகிற காலத்தில் காதலில் சமத்துவம் புகுந்து கொள்கிறது;

நான் மகரயாழ்!
உன் மணிக்கரம் தீண்டினால் போதும்
என்னால் உனக்குப் பெருமை வரும்
உன்னால் எனக்கு வாழ்வு வரும்

உணர்ச்சிகளின் சமத்துவம் இங்கே விளக்கம் பெறுகிறது. காதலுக்காக ஏங்கி, அதன் வருங்கால அழிவை எண்ணிக் கவலையுறும் கவிஞர், அக்கொடுமையை வருணிக்கக் கொடுமைகளில் எல்லாம் கொடுமையான ஏகாதிபத்தியக் கொடுமையை உவமையாகத் தேர்ந்தெடுக்கிறார்:

7/6