பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்யூனிஸ்டும் கவிதையும்

79

பாடவேண்டும் என்று உழைக்கும் மக்களின் பாவலனுக்குப் புதுக்கவிதைக்காரர்கள் கட்டளையிட முடியாது. அவர்களது மரபு இப்பொழுது பழைய மரபைவிட இறுக்கமான எழுதப் படாத, வரையறுக்கப்படாத ஆனால் புதுமரபாக ஒரு குழுவினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மரபாகிக் கனத்துப் போய்விட்டது. அதனால் அவர்கள் தமிழ்க் கவிதையில் பல்வகை மரபுகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவார்கள். யாப்பு விலங்கை ஒடிக்கிற சுதந்திரத்தில் தொடங்கி இருண்மை, படிமஉத்தி என்றெல்லாம் பேசி, அப்படியே எழுதிக் கடைசியில் கட்டுப்பெட்டியான புதுக்கவிதை மரபுகளையும் சம்பிரதாயக் குழுக்களையும் அமைத்துக்கொண்டுவிட்டார்கள். பொது எதிரியான மரபுக் கவிதையை நோக்கித் தங்கள் துப்பாக்கிகளைச் சுடுவதை விட்டுவிட்டு இப்பொழுது தங்களுக்குள்ளேயே சுட்டுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது புதுக்கவிதைக்காரர்கள் கவிதை வடிவம் பற்றிப் பெரிய உள்நாட்டுப் போரைத் தொடங்கியுள்ளார்கள். ஆயினும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மக்கள் கவிஞர்களின் காலை வெட்டத் தவறமாட்டார்கள்.

உழைக்கும் மக்கள் வாழ்க்கை, நல்வாழ்வுக்கான இயக்கங்கள், தியாகங்கள், லட்சியப் பிரகடனங்கள் எல்லாம், வாழ்க்கையில் எவ்வித லட்சியமும் இல்லாத, வாழ்க்கையைக் கணங்களாகப் பார்க்கிற, தொடர்பற்றதாகக் காண்கிற, புதுக் கவிதைக்காரர்களுக்குப் புரியாது. ஆனால் நீங்கள் பார்வையுள்ளவனைக் குருடன் என்பீர்கள். ஏனெனில் நீங்களே குருடர்கள்.

புயலில் பிறக்கும் நமது பாடல்கள்
பூமியையே பற்றி உலுக்கட்டும்
கொதிப்பில் பிறந்த நம்
தத்துவத் தீப்பொறிகள்
இந்திய முதலாளித்துவத்தின்
கொழுப்பில் பற்றி எரியட்டும்!
நாளைய இந்தியாவின் தேசியக் கொடி
நமக்காகப் பறக்கட்டும்!

நமது நாட்டையாண்டு 28 ஆண்டுகளாக, ஒரு பக்கம் நமது நாட்டுச் சொத்துக்காரர்களின் செல்வத்தை வீங்கவைத்து, உழைப்பாளிகளின் உடலையும் உள்ளத்தையும் வற்றவைத்து ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் ஏமாற்றுப் பேச்சுக்களை அங்கதத்தால் சாடுகிறார் கவிஞர்: