பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

நா. வானமாமலை

யத்தை உடைத்தெறிய, முன்னேறுகிற உலகப் பெரும் படையைச் சுட்டிக்காட்டி, அதன் வெற்றியால் உலகில் பசி ஒழியும் என்ற நம்பிக்கையைப் பசித்திருக்கும் ஏழை மக்களின் உள்ளங்களில் எழுப்புகிறார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிக்கச் சொன்னான் பாரதி. ஜகத்தினை அழிக்கச் சொன்னான் ஆனால் இங்கே,

ஜகத்தினில் அனைவர்க்கும் உணவில்லை எனவே
அரசினை அழித்திடுவோம்—முதலாளி
அரசினை அழித்திடுவோம்.

‘நமது கொடி’யும் அக்கொடி தாங்கிய உலக உழைப்பாளிகளின் படையும், முதலாளி அரசினை அழித்துப் பசியையும் ஒழித்துப் பல நாடுகளில் வெற்றி விழாக்கள் கொண்டாடியுள்ளன. அக்கொடியும் படையும் இங்கும் வெற்றிபெற, பசித்திருப்பவன், ‘இன்றைக்கில்லை நாளைக்கில்லை’ என்று புலம்பிக் கொண்டிராமல் பசித்துன்பத்தை, முதலாளி அரசை அழிக்கும் பேராற்றலாக மாற்றி, வறுமையையும் பசியையும் ஒழிக்க நடைபெறும் போராட்டத்தில் ஈடுபடுத்தப் போர் முரசு கொட்டுகிறான் கவிஞன். இதனால்தான் மீரா, இவனைப் பாரதியின் புத்திரன் என்கிறார். விமர்சக மேதாவியோ, “கவிஞன் மகன் கவிஞனாகத்தான் இருக்கவேண்டுமா?” என்று கருத்துப் புரியாமலோ, புரிந்தும் கிண்டல் செய்யவேண்டும் என்றோ கேட்கிறார்.

பரிணாமன் தான் இணைந்து கொண்டுள்ள உழைக்கும் மக்கள் வாழ்க்கையை, ஆர்வங்களை, இலட்சியங்களை எப்ப டிக் கவிதையாக்குகிறார் என்று காண்போம். அதிலே எத்தனை படிமங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் காண்போம்.

உலகு முழுவதும் வாழும் உழைப்பாளி, உலக மக்களை அழித்துவிடக்கூடிய போரைப்பற்றி என்ன நினைக்கிறான்? தனது சக தொழிலாளிகளுக்கு என்ன செய்தி விடுக்கிறான்? அமைதியின் அடையாளமான வெண்புறாவிடம் கவிஞன் உழைக்கும் மக்களின் குரலில் பேசுகிறான்:

கவிமனக் கதியென புவிமன எழுச்சியில்
கலந்திடு யுகப்புறாவே
தவளைகள் குரலொலி சரித்திர மடையுமோ
திரண்டெழு வெண்புறாவே