பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்யூனிஸ்டும் கவிதையும்

83

புவிமன எழுச்சி, உலகத்தின் மன எழுச்சி அமைதியைப் பாதுகாப்பது. தவளைக் குரல் போர் முழக்கம். தவளைக் குரல் சரித்திரத்தில் இடம் பெறுமோ என்று எதிர்மறை விடையுள்ளடங்கிய கேள்வியை யுகப் புறாவிடம் கேட்கிறார். யுகம், அமைதிச் சக்திகள் வெற்றி பெறுகிற காலகட்டம்.

இது கவிதையில்லையாம். ஏனெனில் இக்கேள்வியைப் பரிணாமன் என்ற கம்யூனிஸ்டுதான் கேட்டுக் கட்சிப் பிரச்சாரம் பண்ணுவாராம். இது உலக மக்களின் மனச்சாட்சியின் குரல் அல்லவா? உலக மக்களின் உணர்வு வெள்ளத்தினின்றும் சிந்தனையோட்டத்தினின்றும் விலகி நிற்கும் நடுத்தர வர்க்கச் சுதந்திரவாதிகளுக்கு உலகத்தின் மனச்சாட்சியைப் பற்றி என்ன தெரியும்?

‘சாவேது’ என்ற கவிதையால் உங்கள் உள்ளம் நெகிழவில்லையா? அது கவிதையில்லையா? பங்களாதேஷில் பாகிஸ்தானியப் படை நாய்கள், குடும்பப் பெண்களைக் குதறிக் கடித்துத் துப்பவில்லையா? அவர்கள் நாட்டுப் பற்றோடு, அவர்களுக்குப் பணிய மறுத்தால் அவர்களை வேசிகள் எனக் குற்றம் சாட்டி, நிரந்தர வேசிகளாக்கவில்லையா? இது எங்கெல்லாம் நடந்தது என்று தெரியுமா? சுதந்திரப் போராட்டங்களில் தாய்மாரும் சகோதரிகளும் பங்குகொண்ட வியட்நாமில், ஆப்பிரிக்க நாடுகளில், சிலியில், செக்கோஸ்லாவாகியாவில், போலந்தில், ரஷ்யாவில், இந்தியாவில், ஏன் உலகெங்கும் ஆதிக்க எதிர்ப்புச் சுதந்திரப் போராட்டங்களில் தமது மக்களுக்கும் கணவர்களுக்கும் சகோதரர்களுக்கும் உதவிய மாதர்கள், ஆதிக்க வெறியர்களால் வேசிகளாக்கப்பட்டனர். உலகின் மனச்சாட்சியை எழுப்பிவிட, மனச்சாட்சியுள்ள கவிஞர்கள், கலைஞர்கள் எல்லாம், தங்கள் படைப்புகள் மூலம் இதனைக் கண்டித்தனர். வரலாற்றில் இவர்கள் சுதந்திரச் சக்திகளின் பக்கம் நின்றார்கள். ஆக்கிரமிப்புச் சக்திகளை எதிர்த்தார்கள். தாயையும் தங்கையையும் பாதுகாக்கக் கலையையே கருவியாக்கிப் போராடினார்கள். பரிணாமனும் அந்தக் கவிஞர்கள் மரபில்தான் பாடுகிறார். ஆனால் மார்த்தாண்டனுக்கு இது கம்யூனிஸ்டுப் பிரச்சாரமாகத்தான் தெரியும். உலக மனச்சாட்சியின் துடிப்புகளுக்கு ஒப்பத் துடிக்கும் மனச்சாட்சி அவருக்கிருந்தால்தானே!

யாஹ்யாகான் வீதிகளில்
நம் தாய்கள் கற்பிழக்க
காகிதத்துக் கண்ணகிக்கு
சிலையெடுத்தா மகிழ்ந்திடுவீர்?