பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நா. வானமாமலை

சுதந்திரப் பட்டிமன்றங்கள் நடத்திக் கொண்டிருந்தவர்களும் பாசிசத்தின் அடிமைகளாயினர்.

இந்த இலக்கிய வரலாறு எல்லாம் ௸ணங்களில் வாழ்ந்து, ௸ணத்தையே எழுத முயலுகிற இவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அக்காலத்தில் இரண்டு கட்டுரைகளை மாக்சிம் கார்க்கியும் ரொமெய்ன் ரோலந்தும் எழுதினார்கள். அவை உலக எழுத்தாளர்களுக்கு ஒர் உண்மை விளக்கமும் அறைகூவலும் ஆகும். ஒரு கட்டுரை: ‘கலை மன்னர்களே ஒன்றுபடுக’ எழுதியவர் கார்க்கி. மற்றொரு கட்டுரை: ‘பின்தங்குகிறவர்களைச் சவுக்கால் அடித்து முன்னேறச் செய்வேன்.’ இதை எழுதியவர் ரோமெய்ன் ரோலந்து, அக்கட்டுரையில் அவர் எழுதுவதாவது:

உலகத்தில் அடிமைத்தனத்தையும் பாசிசத்தையும் ஒழிக்க முன்னேறுகிற சுதந்திர சக்திகள், சோசலிசமே உலக மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறதென்பதை உணர்ந்து விரைகிற படையாக உருவாகி வருகின்றனர். இந்தச் சுதந்திர சோசலிசப் படை முன்னணியில் அப்படையின் சுதந்திர சோசலிச முழக்கத்தின் குரலாக, தத்துவ உணர்வூட்டும் மனச்சாட்சியாக எழுத்தாளர்கள் விளங்க வேண்டும். அவர்கள் இப்படைகளின் உணர்வு, சிந்தனைகளின் வெளியீடாக எழுதவேண்டும். அவ்வெழுத்துக்கள், உணர்வும் சிந்தனையும் இல்லாதவர்களுக்கு அவற்றை எழுப்பவேண்டும். இக்கடமையில் பின்தங்கும் எழுத்தாளர்களை என் எழுத்தென்னும் சவுக்கால் அடித்து முன்னேறச் செய்வேன்.

ரொமெய்ன் ரோலந்து 1934இல் சொன்னதைத்தான் பரிணாமன் சொல்கிறார். போர்க் குரல் சில சமயங்களில் கர்ண கடூரமாக ஒலிக்கும். இயற்கையழகையும் காதலின்பத்தையும் வெளியிடுகிற மென்மையும் இனிமையும் நளினமும் போர் முரசில் இராது. இதனால்தான் கடுமையும் வல்லோசையும் பரிணாமனின் கவிதைகளில் கேட்கின்றன. வல்லோசை போர்முரசின் ஓசை. சில சமயங்கள், உலக முற்போக்குப் போர்ப் படையிலிருந்து விலகிப் பின்தங்கும் ‘அறிவாளி’களையும் படிப்பாளிகளையும் படையணியில் சேருவதற்காகக் கடுஞ்சொல் கூறி வாருங்கள் என்று அழைக்கிறார். பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தங்கள் சமயத்திற்கோ, கொள்கைக்கோ எதிரானவர்களைத் தங்களோடு சேர்த்துக்கொள்ள, என்-