பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கம்யூனிஸ்டும் கவிதையும்

87

னென்ன சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்கள்? சித்தர்கள் தங்கள் வழிக்கு மக்களைத் திரட்ட எப்படியெல்லாம் திட்டியிருக்கிறார்கள்? இந்தக் கவியுரிமையைத்தான் பரிணாமனும் பயன்படுத்தியுள்ளார். நமது ‘மத்தியதர வர்க்க’ப் படிப்பாளிகளது அலட்சியத்தையும் கொள்கைப் பற்றின்மையையும் சுய நலத்தையும் போலிச் சுதந்திர முழக்கங்களையும் சாடுவதற்குக் காரணம் இதுதான்.

இன்றைய உலக அரசியலில் வெற்றிபெற்று வரும் மக்கள் சக்தியை உணராமல், தன் கைவிலங்கைப் பார்த்து அழுது கொண்டிருக்கும் நம்பிக்கையற்றவர்களைப் பார்த்து அவர்கள் நிலைமையை உணர்த்துவதற்குப் பாரதியின் ‘அஞ்சியஞ்சிச் சாவார்’ என்ற பாட்டின் வழியில் பரிணாமன் பாடுகிறார்;

கண்ணீர் வாழ்க்கையைப் புன்னகையாக்கும் கருவி ‘உழைப்’ பென்றறியாமல்—கை
விலங்கை அறுத்து எறியாமல்
பன்னீர் மரம்போல் கண்ணீர் சொரிந்தே
பாதை இருந்தும் முழிக்குதடா—புதுப்
பார்வைகள் அற்றே அழியுதடா!

அதோடு விடாமல் நம்பிக்கையற்ற அவர்கள் மனதில் நம்பிக்கையை ஊட்ட அதனைக் குழந்தையாகப் பாவித்து ஒரு தாலாட்டும் பாடுகிறார்;

மூளையின் கரங்களின் விலங்குகள்
சுக்கு நூறாய்ப்
பொடிந்து சிதைந்து சாம்பலாய், பஸ்பமாய்ப்
பாதைப் பனிபோல் குவிகிறது
அந்த மலர் மணத்தில்...
மனிதமும் கலந்து
காற்றின் கணங்களாய் ஓர் நாள்
பிரபஞ்சம் நிறைந்து தளும்பும்!
அன்றுதான் கண்ணே...
துப்பாக்கியால் தொப்பூள் கொடி அறுபடாத
ஒரு யுகத்தின்
சுகப் பிரசவத் தொட்டில்கள் தாலாட்டப்படும்
‘நெருடா’வின் நாளங்கள்
நெய்த இசைகளும்