பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை - பழமையும் புதுமையும்

புற்றீசல் போலப் புதுக்கவிதை பறந்து இறகொடிந்து, வீழ்ந்துவிட்டது போலத் தோன்றுகிறது. இக்குழப்பத்தில் ஆயிரக்கணக்கான படைப்புகள் தோன்றியுள்ளன. புதுப்போக்குகள் சிலவற்றை இனங்காண நான் முயலுகிறபோது கவிஞர்களையெல்லாம் வரிசையாகச் சொல்லிப் படைப்புகளை விமரிசனம் செய்யும் முயற்சியில் இறங்கப் போவதில்லை. ஆயினும் முற்றிலும் பெயர்களை ஒதுக்குவதும் இயலாத காரியம். எனவே எனக்குக் கிட்டியுள்ள சில தொகுப்புகளை வைத்துக்கொண்டு எனது கருத்துக்களைக் கூறுவேன். அவற்றில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலக்கியத் தத்துவம் என்ன, அதனைக் கவிதையில் கடைப்பிடிப்பதில், தொகுப்பில் உள்ள கவிஞர்களின் கவிதைகளே வெற்றி பெறுகின்றனவா என்றும் ஆராய்வேன்.

‘நாற்றாங்கால்’ தொகுப்பில் ‘முன்னுரை’ என்று தலைப்பிடாத மரபு மீறிய கவிதைக்கு முன்னுள்ள உரைநடைப் பகுதியில் ந.முத்துசாமி புதுக்கவிதையின் தன்மைபற்றி வரையறை ஒன்றைத் தருகிறார்;

பழக்கப்பட்டுவிடுகிற மரபை மீறிக் கண்ட சுதந்தரம் தான் புதுக்கவிதை, புதிய மரபில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதில்தான் புதுக்கவிதை இருக்கிறது.

இதில் இருந்து, புதுக்கவிதை மரபு மீறவேண்டும் என்பது அவர் கருத்து போலத் தோன்றுகிறது. அப்படியானால் அது எந்தக் கொள்கைக்கும் அகப்படாது; வரையறைக்கும் உட்படாது. பழைய மரபை அழித்துப் புது மரபாக மாறிவிடாமல் பாதுகாக்கவேண்டும். இவ்வளவுதான்.

கருத்து, உணர்ச்சி, நிகழ்ச்சி இவை பற்றிய அக்கரை எதுவும் புதுக்கவிதைக்கு இருக்கவேண்டாம். எந்தப் பழைய கருத்தாயினும் புதிய புதிய மரபு மீறிய கவிதை உருவங்கள் வேண்டும். அதாவது மொந்தைகளை உடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் நவீனத்துவ மரபு உடைப்புப் பணி.

கரு பற்றி, இந்நூலில் எழுதிய பகுதியில் நான் சொன்னது, இத்தொகுப்பில் உள்ள கவிதையனைத்திற்கும் பொருந்துகிறது.

7/7