பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதை-பழமையும் புதுமையும்

93

கிறார். ஒரு வேளை பூதம் என்பது பேயாக இருக்கலாமோ? பேய்த்தன்மை பெற்றுவிட்ட மனிதரைப் பார்த்துப் பேய்கள் சிரிக்கின்றன என்னும் பொருள் தானே? ‘இருண்மை’ இங்கேயும் வாசகனை மருட்டுகிறது.

இன்னொரு பழைய போக்கு அரசியல் புதிர்கள். ஒரு கருத்தை முன்பின்னில்லாமல் சொல்லி நிறுத்தி விடுவது. ஒரு கருத்தின் வளர்ச்சி நிலையில் அதன் வருங்காலத்தைக் காண முயலாமல் அது மனதில்படும் நேரத்தில், அதைப்பற்றிப் பெரிதாக்கிக் கருத்தைச் சொல்லிவிடுவது. இவற்றைப் புதிர் கவிதைகள் என்று சொல்லிவிடுவது. இவை தற்கால நிலைபற்றி வெறுப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் இதை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வாசகனுக்கு ஏற்படுத்துவதில்லை.

உடைமைச் சமுதாயம் படைத்திருக்கும் வக்கிரமான மனித குணங்களையே நிலையானதாக ஏற்றுக்கொண்டு, காலகாலமாக இதனை எதிர்த்து மனித வலிமையையும் மனிதத்துவத்தின் மேன்மையையும் போற்றிப் பாதுகாக்கப் போராடி வந்திருக்கிற மேன்மையான நல்மரபுகளைக் காணப் பார்வையில்லாத இப்போக்கு சமுதாய உணர்வில்லாத மிகப் பல கவிஞர்களிடம் நீடித்து நிலைத்துள்ளது. இதற்குச் சில உதாரணங்கள் தருவோம்:

அர்த்தம்

வழிக்காரர்
வீசிப் போவார்
கிடைத்ததைத்
தக்கையாய்
நான் மிதக்கும்
குளத்துக்குள்ளே
கலக்கித் தெளிவாக்கும்
வட்டங்களாய்
நீர்க்கோடுகள்
என்னைச் சுற்றி
எப்போதும்.

இருண்மை உத்தி முழுமையாய் இருக்கிறது. எதைக் குறித்து இவர் எழுதுகிறார்? அர்த்தம் என்பது தலைப்பு. சமூக உணர்வுடையவனுக்கு ஏதாவது புரிகிறதா?

வேறொன்று. பட்டங்கள் பற்றி. இது ஒரு வெற்று விமர்சனம். கோபக்காரக் கவிஞரின், வலுவற்ற கோபத்தின் வெளியீடு.