பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

49


மதியால் தான் விதி உண்டாகிறது என்று சொல்வதை விட்டு விட்டு மதியை விதி அழிக்கும் என்றால் அது சரியல்ல.

மதி என்றால் அறிவு. அறிவுடன் செயல் செய்கிற போது அது அருமையாக நடக்கும். இனிமையாக முடியும். நிதானத்தோடு காரியம் செய்கிறபோது நேர்கிற தன்மையும் பதமாகவே இருக்கும். மதிக்காமல், புத்தியில்லாமல், ஞாபகம் இல்லாமல், (மதியில்லாத) விருப்பம் போல வேலைகள் செய்தால் விளைகிற விதியானது எப்படி இருக்கும்?

விளைவுகள் நல்லதாக இருக்க அறிவானதாக மதி இருக்கவேண்டும். வேப்பம் விதையைப் போட்டு விட்டு முளைக்கும் மரம் இனிக்கும் கனியைத் தரவேண்டும் என்று விரும்பினால் எப்படி? அதுபோல்தான் விதியை மதியால் நிர்ணயிக்க முடியும். விதியைக் கட்டுப்படுத்த முடியும். விதியின் வேகத்தை அடக்கி வைக்க முடியும். எப்பொழுது? மதியில் அறிவும் நிதானமும் இருக்கும் பொழுது!


57. விசுவாசம்

நாம் ஒருவர் மேல் விசுவாசமாக இருக்கிறோம் என்று கூறினால், நாம் அவர் மேல் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறோம், அவர் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கிறோம் என்று அர்த்தம்.

விசுவாசம் என்றால் நம்பிக்கை என்று பொருள். உண்மை என்று அர்த்தம்.

நம்பிக்கை என்றால் நிஜம் என்றும் சத்தியம் என்றும் உறுதிப்பாடு என்றும் அர்த்தம்.