பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

79


89. இளமையில் கல்!

இளம் வயதில் கற்றுக் கொள் என்றுதான் இதற்குப் பொருள் தந்திருக்கின்றனர். கற்பதற்குக் காலம் கிடையாது. வயதும் இல்லை. வாழ்வு முழுவதும் தொடரும் ஓர் உணர்வுதான் கற்றலாகும்.

அங்கே இள மெய்யில் கல் என்பதுதான் உரிய மொழி.

இளமெய்யில் வலிமை இருக்காது. பசலைத்தனம் இருக்கும். வளைவும் நெளிவும் நெகிழ்வும் அதிகம் இருக்கும். பிஞ்சுத் தன்மையும் பெரிதாக இருக்கும். அப்படியே வளர்ந்தால், அந்த மெய்யில் வலிமையும் திறமையும் திடமும் தேர்ச்சியும் வளராது.

ஆனால், இளமெய்யாக இருக்கும் பொழுதே அது வளமெய்யாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கல் என்றனர். கற்றல் என்ற சொல்லுக்கு சிலை, மலை என்ற பொருள்களும் உண்டு.

இள மெய்யானது சிலை போல அளவோடும் பொலிவோடும் அழகோடும், மலைபோல் திண்மையும் தீர்க்கமும் சேர்ந்திருக்க வேண்டும்.

இளமெய் கல்லாக விளங்கினால் தான் எதிர்காலத்தில் அந்த உடல் விரைவாக முதுமெய்யை அடையாமல், வாழ்வை ரசித்து வாழச் செய்யும் பத மெய்யாக விளங்கும்.

இள வயதிலேயே உடல் பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும் என்றுதான் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கிறார்கள்.