பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு.சி. ரகுநாதன்

25



புதுமைப்பித்தன் தமது 'ஆண்மை' கதைத்தொகுதிக்கு எழுதியுள்ள முன்னுரையில் மணிக்கொடி பத்திரிகை நின்று போன விதம் குறித்துப் பின்வருமாறு எழுதியுள்ளார்.

'....மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிப்பல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காக நானும் பி.எஸ். ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம். அது இரண்டு மூன்று வருஷங்களில் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில், அதைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடும் நண்பரைப் பெற்றோம். அவர் அவளை ஒருவருக்கு விற்றார். விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக்கலிகாலத்தில் கிடைத்தது. இதுதான் மணிக்கொடியின் கதை’ (ஆண்மை முன்னுரை).

மேற்கண்ட பகுதியில் 'கைப்பிடித்து இழுத்துக்கொண்டு' ஓடிய நண்பர் என்று யாரைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? அவரும் ப.ராமஸ்வாமியேதான். மணிக்கொடி தோற்றுவித்த நவயுகப்பிரசுராலயம் ப.ரா.வின் ஆட்சிக்காலத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்களிடம் விற்கப்பட்டதையும், அத்துடன் மணிக்கொடியும் நின்றுப் போனதையும்தான் புதுமைப்பித்தன் மேற்கண்ட பகுதியில் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவெல்லாம் எழுதிய பின்னர் வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்; ஒரு கேள்வி எழலாம். 'அம்மாளுவை நினைக்கிறபொழுது ஹியூகோ சிருஷ்டித்த பாண்டைன் என்ற பெண்ணின் ஞாபகம் வருகிறது' என்றும், துன்பக்கேணியைப் பற்றிக் குறிப்பிடும்போது. 'இக் கதையைப் படிக்கும் பொழுது லவலின் போவிஸ் எழுதிய கருங்காலியும் தந்தமும் என்ற புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி என் ஞாபகத்துக்கு வருகிறது' என்றும்தானே தேசிகன் எழுதியிருக்கிறார். ஞாபகம் வருகிறது என்ற சொற்கள் வெறுமனே ஒப்புமை காணும் சொற்கள் தானே. இதனைக் கொண்டு, தேசிகன் இவ்வாறு எழுதியதன் மூலம், புதுமைப்பித்தனை ஒரு தழுவல் இலக்கியக்கர்த்தா என்று விஷமத்தனமாக எழுதிவிட்டார் என்று கொள்ள எங்கே இடம் இருக்கிறது? 'என்பதே அந்தச் சந்தேகம்; அந்தக் கேள்வி.