பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

புதுமைப்பித்தன் கதைகள்



ஒரு மூலை திரும்புகிறான்; சற்று ஒதுக்கமான மூலை அலங்கோலமான ஸ்திதியில் ஒரு பெண், பதினாறு, பதினேழு வயது இருக்கும். காலணா அகலம் குங்குமப் பொட்டு, மல்லிகைப்பூ இன்னும் விளம்பரத்திற்குரிய சரக்குகள். அவளை அவன் கவனிக்கவில்லை, 'என்னாப்பா, சும்மாப் போரே? வாரியா?' வாலிபன் திடுக்கிட்டு நிற்கிறான். 'நீ என்னாப்பா, இதான் மொதல் தரமா? பயப்படுறியே? - கையை எட்டிப் பிடித்தாள். 'உன் பெயரென்ன?' 'ஏம் பேரு உனக்கு என்னாத்துக்கு?' இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரே வழிதான் புலப்படுகிறது. அதற்குள் அவள் சந்திற்குள் இழுக்கிறாள்; வாலிபன் உடனே மடியிலிருந்த சில்லறைகளையெல்லாம் அவள் கையில் திணித்துவிட்டு, 'போ! போ!' என்று அவளை எட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறான். “ஏண்டா, பேடிப்பயலே! பிச்சைக்காரின்னா நெனச்சுகினே!' என்று சில்லறைகளை விட்டெறிகிறாள். அவன் அதற்குள் ஓடிப்போய் விட்டான். இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக்கிறாள். சற்றே பயம். 'பேடிப்பயல் பேமானி' என்று முணுமுணுத்துக் கொண்டே இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள்: ஆனால் அவனும் அன்று பட்டினி என்று இவளுக்குத் தெரியாது. எக்காளச் சிரிப்பு மாதிரி, எங்கோ ஒரு பக்கத்திலிருந்து டிராமின் - கணகணப்பு.