பக்கம்:புது டயரி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுதுகோலின் அவதாரம்

95

 மாத்திரம் அழகாக இருக்கும். மற்றவர்கள், “என்ன இது? ஈ மையில் விழுந்து உட்கார்ந்தாற்போல் எழுதுகிறாயே” என்று சொல்வார்கள். இதைக் கேட்டுக் கேட்டு அவளுக்கு ரோசம் வந்துவிட்டது. கையெழுத்தைத் திருத்திக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். என் பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள். அவளுக்கென்று தனியே பேனா இருக்கிறது. ஆனாலும் என் பேனாவில் எழுதினால் எழுத்து நன்றாக வரும் என்பது அவள் நினைப்பு. அதை எடுத்து எழுதினாள். எப்போதாவது யாருக்காவது ஒரு கடிதம் அரைக் கடிதம் எழுதுகிறவள், சில காலமாக விழுந்து விழுந்து பலருக்குக் கடிதம் எழுதினாள். நான் ஆச்சரியப் பட்டேன். அவள் எந்தப் பேனாவினால் எழுதுகிறாள் என்பதை நான் கவனிக்கவில்லை.

நன்றாக எழுதிக் கொண்டிருந்த பேனா அது. சில காலமாக அது என் போக்கில் எழுதாமல் தன் போக்கிலே எழுதலாயிற்று. முள்ளைத் தடவிக் கொடுத்தேன். உதறிப் பார்த்தேன். முள்ளின் பிளப்பைச் சரிபண்ணுவதற்காக இப்படியும் அப்படியும் திருப்பினேன். கொஞ்சமாகப் பலகையில் வைத்து அழுத்திப் பிறகு எழுதினேன். என்னுடைய பழைய எழுத்து வரவே இல்லை. அப்போதுதான் எனக்கு ஒர் எண்ணம் வந்தது. வேறு யாரோ என் பேனாவை எடுத்து எழுதுவதனால் அது புதிய பாதையில் போகிறது என்று ஊகித்தேன். “என் பேனாவை யார் எடுத்து எழுதினார்கள்?” என்று கேட்டேன். “யார் எழுதுவார்கள் நான்தான் எழுதினேன்” என்று என் மனைவி தனக்கு உரிமை உண்டு என்று தொனிக்கும்படி பதில் சொன்னாள். “உன்னை யார் எடுக்கச் சொன்னது?” என்று கோபத்துடன் கேட்டேன். “பேனாவை எடுக்க யாரிடம் கேட்க வேண்டும் நான் அதை ஒடித்து விட்டேனா?” என்று அவள் எதிர்க் கேள்வி விடுத்தாள். “இதோ பார்; இது குட்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/102&oldid=1151521" இலிருந்து மீள்விக்கப்பட்டது