பக்கம்:புது டயரி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணுக்கு அணிகலன்

சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நன்னெறியில் ஒரு பாட்டு வருகிறது. வேந்தர்களைவிடப் புலவர்கள் சிறந்தவர்கள் என்பதைச் சொல்ல வருகிறார். ‘வேந்தர்கள் பொன்னால் அணிகளைப் புனைந்து கொள்வார்கள். ஆனால் அவர்களைப் போல் அணிகளைப் புனையா விட்டாலும் பெரிய கல்வியையுடைய புலவர்களுக்கு அரசர்கள் சமானம் ஆக மாட்டார்கள்’ என்று சொல்லிவிட்டு அதற்கு ஒர் உவமை சொல்கிறார். ‘உடம்பில் உள்ள காது, மூக்கு, கழுத்து. கை, இடை, கால் முதலிய அங்கங்கள் எல்லாம் பலவகையான அணிகலன்களைப் பூணுகின்றன. ஆனால் கண்ணோ எந்த அணியையும் பூணுவதில்லை என்றாலும் அந்த உறுப்புக்கள் கண்ணுக்குச் சமானம் ஆகுமோ?’ என்று கேட்கிறார்.

“பொன்அணியும் வேந்தர்
புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம்
மற்றுஒவ்வார்; மின்னும்அணி
பூணும் பிறஉறுப்புப்
பொன்னே, அது புனையாக்
காணும்கண் ஒக்குமோ காண்.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/106&oldid=1151533" இலிருந்து மீள்விக்கப்பட்டது