பக்கம்:புது டயரி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

புது டயரி


திருகுவலி வந்த கதையாய் என்னலே சரியாக நடக்கவே முடியவில்லை. பள்ளம் மேடாகத் தோன்றுகிறது; மேடு பள்ளமாகத் தோன்றுகிறது. காலைத் தூக்கித் தூக்கி வைக்கிறேன்.

துரியோதனன் அப்படித்தான் நடந்தானம். அதைக் கண்டு திரெளபதி சிரித்தாளாம். பாரதப் போர் மூள்வதற்கு அதுதான் வித்தாயிற்று. இங்கே நான் நடந்ததைப் பார்த்து எந்தத் திரெளபதியும் சிரிக்கவில்லை; என் தர்ம பத்தினிதான் சிரித்தாள். “என்ன இப்படி, முள்மேல் நடக்கிறமாதிரி தத்தித் தத்தி நடக்கிறீர்கள்?” என்று கேட்டாள். கண்ணாடியைக் கழற்றி எறிந்து விடலாமா என்று தோன்றியது. டாக்டரிடம் போய், “ஏன் ஐயா, சாமிதான் கண்ணைக் கெடுத்து விட்டதென்றால் நீர் என் நடையைக் கெடுத்து விட்டீரே!” என்று கேட்கலாம் என்று எண்ணினேன். ஒரு கால் கண்ணாடிக் கடைக்காரன் தவறு செய்துவிட்டானே என்று யோசனை வந்தது. டாக்டரிடம் போய்க் கேட்பதற்கு எனக்குத் தைரியம் இல்லை. கடைக்காரரிடம் போய்க் கேட்கத் துணிந்தேன்.

“ஏன் ஐயா, இப்படித் தப்பான கண்ணாடியைச் கொடுத்துவிட்டீரே?” என்று கேட்டேன்.

“இல்லையே! டாக்டர் குறித்துக் கொடுத்தபடிதானே செய்து கொடுத்தேன்?” என்றார் அவர்.

“அப்படியானால் என்னால் சரியாக நடக்க முடியவில்லையே! எங்கோ பள்ளத்தில் காலை வைக்கிறதுபோல இருக்கிறதே!”

அவர் இடி இடி என்று சிரித்தார். “நீங்கள் புதிதாகக் கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் முதலில் அப்படித்தான் இருக்கும். இரண்டு நாள் ஆனால் சரியாகி விடும்” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/111&oldid=1151547" இலிருந்து மீள்விக்கப்பட்டது