பக்கம்:புது டயரி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

புது டயரி

 உர்துவில் சாலேசரம் என்று வழங்குமாம். எனக்கு அப்படி ஒரு ஈசுவரமும் இல்லை. எனக்குக் குறுக்குப் பார்வை. நான் விசாலமான பார்வையோ தீர்க்கதரிசனமோ இல்லாதவனா? - இப்படி எண்ணும்போது எனக்கு ஒரு புதிய வருத்தம் உண்டாயிற்று.

எந்த வருத்தமும் நாளடைவில் குறைந்து விடுகிறது. இப்போதெல்லாம் பழைய வருத்தம் எதுவும் இல்லே. கண்ணாடி போட்டுக் கொண்டால் இடைவிடாமல் போட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கண் கெட்டுவிடும் என்று சொல்கிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது கண்ணாடியைக் கழற்றி வைத்து விடுகிறேன். கண்ணாடி இல்லாமலேயே படித்து வருகிறேன். வெளியில் போனால் கண்ணாடி போட்டுக் கொள்கிறேன்.

இப்படிச் செய்வதனால் என் கண் கெட்டு விட்டதா என்று பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டது. என் கண்ணாடி கீழே விழுந்து உடைந்துபோயிற்று. மறுபடியும் டாக்டரிடம் காட்டினேன். பழைய குறிப்பைக் காட்டினேன். அவர் சோதனை செய்தார். “பழைய கண்ணாடி போட்டு எத்தனை வருஷங்கள் ஆயின?” என்று கேட்டார். “உங்கள் குறிப்பையே பாருங்கள். தேதி இருக்கிறதே! எட்டு வருஷங்கள் ஆயின” என்றேன். “அப்படியா எட்டு வருஷமாகியும் உங்கள் கண் பழையபடியே இருக்கிறது” என்று ஆச்சரியப்பட்டார். “முன்புக்கு இப்போது பார்வை நன்றாகவே இருக்கிறது” என்று அவர் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அப்படி அவர் சொல்லவில்லை. என்றாலும் கண் மேலும் கெடவில்லை என்பதை அறிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே உண்டாயிற்று.

“எனக்குச் சாலேசரம் வராதா?” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/113&oldid=1151580" இலிருந்து மீள்விக்கப்பட்டது