பக்கம்:புது டயரி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

புது டயரி

 யற்ற காமலீலை. இப்போது மட்டும் அந்தப் புத்தகத்தை வெளியிட அரசு அனுமதிக்குமானல் ஒரே நாளில் லட்சம்பிரதிகள் செலவாகிவிடும்!

விவேகசாகரமும் வைத்திருந்தேன்; கைவல்ய நவநீதமும் வைத்திருந்தேன். இராஜாம்பாள் சரித்திரம், ஹனுமான் சிங் முதலிய துப்பறியும் நாவல்களும் இருந்தன. அப்போது வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் வராத காலம். ஆரணி குப்புசாமி முதலியார் தழுவல் நாவல்கள் எங்கும் பரவியிருந்த காலம்.

கிட்டத்தட்ட முந்நூறு புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவற்றையெல்லாம் சேர்த்துப் பூர்ணமதி புத்கக சாலை என்று பெயரிட்டேன். பூ. ம. பு. என்று சுருக்கி மாக்கல்லில் நானே அச்சு அமைத்து மையில் தோய்த்துப் புத்தகங்களில் குத்தினேன், நாவல்களை அன்பர்களுக்குக் கொடுத்து வாசித்த பிறகு வாங்கி வைப்பேன், இலவச வாசகசாலை என்னுடைய புத்தகசாலை.

பத்திரிகைகளை எல்லாம் சேர்ப்பேன். அப்போதெல்லாம் எந்தப் பத்திரிகைக்காரரும் மாதிரிப் பிரதி வேண்டுமென்றால் உடனே அனுப்பி விடுவார்கள். அநேகமாக அந்தக் காலத்தில் நடைபெற்ற பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு பிரதியாவது என்னிடம் இருக்கும். ஆனந்த போதினிக்கு நான் சந்தாதார். புத்தகக் கம்பெனிகளுக் கெல்லாம் கேட்லாக்குக்கு எழுதி வாங்கி வைத்துக் கொள்வேன். அந்தக் காலத்தில் கார்டு காலணாத்தான். நாள்தோறும் கடிதங்கள் எழுதுவேன். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது தபால் வந்துகொண்டே இருக்கவேண்டும். பத்திரிகையின் மாதிரிப் பிரதியோ காட்லாக்கோ எதுவானலும் சரி, வரவேண்டும். தபால் நிலையத்துக்குப் போய்த் தபால் கட்டுகளை உடைக்கும்போதே உடனிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/119&oldid=1152380" இலிருந்து மீள்விக்கப்பட்டது