பக்கம்:புது டயரி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் புத்தகங்கள்

113

 தபால்களை வாங்கிக் கொள்வேன். அந்தக் காலத்தில் வி. பி. பி.யில் புத்தகம் தருவிப்பது எளிது. அதற்கென்று விசேஷச் செலவு கிடையாது. இப்போது வி. பி. பி.யில் தருவிப்பதென்றால் எத்தனை செலவு ‘சுண்டைக்காய் கால் பணம், சுமைகூலி முக்கால் பணம்’ என்பது இந்தக் கால வி. பி. பி.ச் செலவுக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான பழமொழி.

அப்படிப் பல பத்திரிகைகளைப் படித்துப் படித்து நாமும் பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. தினப் பத்திரிகைகளுக்கு ஊர்ச் செய்திகளை எழுதினேன். ஒவ்வோர் ஊரின் பெயரையும் தலைப்பாக இட்டுக் கீழே செய்திகளை வெளியிட்டு வந்த காலம் அது. எங்கள் ஊராகிய மோகனூரைப் பற்றி எத்தனையோ செய்திகளை எழுதினேன். பிறகு கவிதை. தேசீய கீதங்கள் முதலியவற்றை மாதப் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினேன்.

சென்னைக்கு வந்த பிறகு இலக்கியப் புத்தகங்களைச் சேகரிப்பதில் ஆசை பிறந்தது. வாங்கி வாங்கிச் சேர்த்தேன். ஒரே நூலில் நான்கைந்து பதிப்பு இருக்கும். எல்லாவற்றையும் வாங்கி வைப்பேன். திவ்யப் பிரபந்தத்தைப் பலபேர் பதிப்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட 15 ரூபாய் கொடுத்து ஒரு புதுப் பதிப்பை வாங்கியிருக்கிறேன். எல்லாம் எப்போதும் பயன்படுமா என்று கேட்கலாம். பெண்பிள்ளைகள் எத்தனை பாத்திரங்கள் வாங்கிச் சேர்க்கிறார்கள்! எல்லாம் நாள்தோறுமா பயன்படுகின்றன?

என்னுடைய ஆசிரியப் பெருமான் ஐயரவர்கள் பெரிய புத்தகப் பித்தர். பல நூல்களைத் தொகுத்தார்கள். படித்தார்கள். ஏட்டுச் சுவடியிலேயே படித்தவர்கள் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/120&oldid=1152382" இலிருந்து மீள்விக்கப்பட்டது