பக்கம்:புது டயரி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையசைத்தால் போதும்

121

 வேண்டுமானாலும் எழுது. ஆனால் ரசிகன் அல்லாதவனிடத்தில் என் கவியைப் பாடும்படியான துர்ப்பாக்கியம் எனக்கு உண்டாகும்படி எழுதாதே, எழுதாதே, எழுதாதே’ என்கிறார். ‘அரளிகேஷு— கவித்வநிவேதனம் சிரஸி மாலிக! மாலிக! மாலிக!’ என்பது அந்தச் சுலோகப் பகுதி. ‘எழுதாதே, எழுதாதே, எழுதாதே,என்று மூன்றுதடவை சொல்லும்போது அந்தக் கவிஞருடைய உள்ளக் குமுறல் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

சுவையுள்ளது, சுவையில்லாதது என்று தரம் பார்ப்பதைச் சங்க காலத்து நூல்களில் ‘வரிசை அறிதல்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘வரிசை அறிந்து பாராட்டுவார் யாராவது இருக்கிறார்களா?’ என்று புலவர்கள் ஏங்கியிருப்பார்களாம். “வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை” என்று ஒரு புலவர் சொல்கிறார்.

ஒரு கற்பனைக் கதை இங்கே நினைவுக்கு வருகிறது. தங்கம் தன்னைப் படைத்த பிரம தேவனிடம் சென்று குலுங்கிக் குலுங்கி அழுததாம். உலகத்தைப் படைத்தவன் அதைப் பார்த்து, “தங்கம்மா, பொன்னம்மா, ஏன் அம்மா இப்படி அழுகிறாய்?” என்று கேட்டான்.

தங்கம், “என்னையும் படைத்து அந்தத் தட்டானையும் படைத்தாயே! அதனால் அழுகிறேன்” என்று சொல்லியது.

“ஏன் உனக்கு அவன்மேல் கோபம்? உன்னை அவன் நெருப்பில் இட்டு உருக்குகிறானே; அதனால் வருத்தமா!”

“இல்லை. அப்படிச் செய்வதனால் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/128&oldid=1152403" இலிருந்து மீள்விக்கப்பட்டது