பக்கம்:புது டயரி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலையசைத்தால் போதும்

125


வியந்தார். அவர் இந்தச் சிறிய ஜமீனில் இருக்கிறாரே என்ற அங்கலாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. அதைச் சாஸ்திரிகளிடமே சொல்லிவிட்டார். “இந்தக் காட்டுக்கு நடுவில் இருக்கிறீர்களே! குடத்தில் வைத்த விளக்குப் போல் ஆகிவிட்டீர்களே! நீங்கள் எங்கள் சம்ஸ்தானத்துக்கு வந்தால் எத்தகைய சம்மானங்களெல்லாம் கிடைக்கும். தெரியுமா?” என்றார். அதைக் கேட்ட அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் புன்னகை பூத்தார்; “இந்தக் காட்டில்தான் யுவரங்கன் என்னும் ரசிகசிகாமணியாகிய சிங்கம் இருக்கிறது” என்று சொல்லி ஒரு சுலோகத்தைச் சொன்னார். ‘ஆண்டு முதிர்ந்த, கிழவி ஒருத்தி கட்டியணைத்து என்ன பயன்? இளம் மங்கை ஒருத்தி காலால் உதைத்தாலும் அந்த இன்பத்துக்கு ஒப்பாகுமா? யுவரங்கன் ரசிகத்தன்மைக்கு ஈடும் எடுப்பும் இல்லை’ என்ற கருத்தை உடையது அது.

கவிதை, சங்கீதம், நாடகம் முதலிய கலைகளில் எதுவானாலும் ரசிகர்கள் இருந்தால்தான் கலைஞர்கள் மகிழ்வார்கள்; மேலும் மேலும் தம் திறமையைக் காட்டுவார்கள். கலைஞர் உள்ளம் வெறும் பணத்துக்கோ பேய்க் கொடைக்கோ மகிழாது.

ஒரு வித்தையாடி பல வகை விலங்குகளைப் போல நடிப்பான்; குரல் எழுப்புவான். கோகர்ண வித்தை, கஜகர்ண வித்தை எல்லாம் செய்வான். மாடு தனியே தன் காதை ஆட்டும்; அதைப்போல ஆட்டுவது கோகர்ண வித்தை. யானை தன் காது நுனியை மட்டும் ஆட்டும்; அப்படி ஆட்டிக் காட்டுவது கஜகர்ண வித்தை. அந்த வித்தையாடி காதை ஆட்டுவதோடு மட்டும் அல்லாமல் பசுமாடு மாதிரி முக்காரம் செய்வான்; யானை மாதிரி பிளிறுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/132&oldid=1152414" இலிருந்து மீள்விக்கப்பட்டது