பக்கம்:புது டயரி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடந்த கதை

131

 போது எனக்குப் பதினாறு பிராயம்: சேந்தமங்கலத்தில் அவதுாத சுவாமிகள் ஒருவர் இருந்தார். ஸ்ரீ சுயம்பிரகாசப் பிரம்மேந்திர சரஸ்வதி என்பது அவர்கள் திருநாமம். அவர்களிடம் போய்ச் சரணம் அடைந்து சந்நியாசி ஆகிவிடவேண்டும் என்று ஆசை. “நான் சுவாமிகளிடம் போய்ச் சிலகாலம் கைங்கரியம் பண்ணி நல்ல நூல்களை வாசித்து விட்டு வருகிறேன்” என்று என் தாய்தந்தையரிடம் விடை கேட்டேன். அப்போது எனக்குத் தம்பி பிறக்கவில்லை. இப்போது ஆண்டவன் திருவருளால் ஒரு தம்பி இருக்கிறான்.

என் தாய்தந்தையருக்கு உள்ளே திகில். நான் இருக்கும் நிலையைக் கண்டு, எங்கே இவன் சந்நியாசியாகி விடுவானோ! என்று பயந்தார்கள். ஆகவே அவர்கள் போகக் கூடாது என்று தடுத்தார்கள். எனக்கோ சேந்தமங்கலம் போக வேண்டும் என்ற ஆசை அதிதீவிரமாக எழுந்தது. திருவாசகத்தில் கயிறு சார்த்திப் பார்த்தேன்; “போனோம் காலம் வந்தது காண், புயங்கப் பெருமான் பொன்னடிக்கே!” என்ற பகுதி வந்தது. இறைவனே உத்தரவு கொடுத்து விட்டதுபோல் எண்ணினேன். முதல்நாள் இரவு ஒரு கதர் வேஷ்டியையும் துண்டையும் யாரும் அறியாமல் எடுத்து வைத்து வெளித் திண்ணையில் படுத்துக் கொண்டேன். விடியற்காலையில் எழுந்து புறப்பட்டு விட்டேன். எங்கள் ஊராகிய மோகனூரிலிருந்து நாமக்கல் பன்னிரண்டு மைல்; அங்கிருந்து சேந்தமங்கலம் ஏழுமைல். அங்கே ஒரு சின்னஞ் சிறிய குன்றின் குகையில் சுவாமிகள் இருந்தார். அங்கே பிற்பகல் ஒரு மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். சுவாமிகள் காலில் விழுந்தேன். அவர், “ஏகபுத்ர விஷயம். மாதாபிதா சம்மதம் இல்லாமல் சந்நியாசம் கொடுக்கக் கூடாது!” என்று சொல்லிவிட்டார்; நான் எவ்வளவோ மன்றாடினேன்; மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/138&oldid=1152933" இலிருந்து மீள்விக்கப்பட்டது