பக்கம்:புது டயரி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

புது டயரி

 மறுபடியும் அங்கிருந்து நாமக்கல் வந்து அங்கிருந்து மூன்றுமைல் தூரத்தில் வல்லிபுரம் என்ற ஊரில் உள்ள என் நண்பர் வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் கால்வலி தெரிந்தது. அந்த வீட்டு அம்மாள் விளக்கெண்ணெய் தடவிக் காலுக்கு வெந்நீா் விட்டு நீவினாள். அது வரைக்கும் கால்வலி தெரியாமல், அப்போது எப்படி வந்தது என்று ஆச்சரியப்பட்டேன். வேறு நினைவே இல்லாமல் சுவாமிகளையே நினைத்துச் சென்றதுதான் காரணம். மனவலிமை உடம்பில் உள்ள துன்பத்தை மறக்கச் செய்துவிட்டது.

மற்றோர் அநுபவமும் உண்டு. அப்போதும் ஒரு சுவாமிகளைப் பார்க்கத்தான் நடந்து போனேன். சிருங்கேரி சங்கராசாரிய சுவாமிகளாகிய ஸ்ரீமத் சந்திரசேகர பாரதி சுவாமிகள், அப்போது கொடுமுடிக்கு விஜயம் செய்திருந்தார்கள். அவர்களைப் போய்த் தரிசித்துவிட்டு வரவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. அப்போது என் நண்பர் மோ. ஸ்ரீ. செல்லம் ஐயரும் எங்கள் ஊரில் இருந்தார். அவரும் நானும் இளமையிலிருந்து நெருங்கிப் பழகியவர்கள். இருவரும் புறப்படலாம் எண்று திட்டமிட்டோம். மோகனூரிலிருந்து காவிரியைப் பரிசலில் தாண்டி அக்கரையாகிய வாங்கலை அடைந்து, அங்கிருந்து ஐட்காவில் ஆறு மைல் தூரத்தில் உள்ள கரூருக்குப் போய், அங்கே ரெயிலேறி, மேற்கே உள்ள கொடுமுடிக்குப் போக வேண்டும். இந்தப் பயணத்துக்குச் சிறிது பணம் வேண்டும். என் தகப்பனாரைக் கேட்டேன்; தரமாட்டேன் என்று சொல்லி விட்டார். அவருக்கு அந்தச் சுவாமிகளோடு நானும் யாத்திரையாகப் புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயம்.

ஏதோ கையிலிருந்த சில்லறையை எடுத்துக்கொண்டு கால் நடையாகப் புறப்பட முடிவு பண்ணினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/139&oldid=1152935" இலிருந்து மீள்விக்கப்பட்டது