பக்கம்:புது டயரி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

புது டயரி

 குறுக்கே தடுக்கிறது!” என்று மறுகியது. ஆனால் சிறிது நேரம் கழித்து ஆசார்ய சுவாமிகள் வெளியிலே திண்ணைக்கு எழுந்தருளிப் பூஜை செய்தார்கள். எங்கள் கண்குளிர அதைத் தரிசித்தோம். அன்று இரவு அங்கே தங்கி உறங்கியதில் கால்வலி போய்விட்டது. எங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ரெயிலேறித் திரும்பினோம். இது நான் நெடுந்துாரம் நடந்த இரண்டாவது கதை.

சென்னைக்கு வந்த பிறகு கடற்கரைக்குப் போக வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் தமிழ்த் தெய்வத்தின் திருப்பணியில் ஈடுபட்ட எனக்கு மாலை வேளையில் நேரம் இருப்பதில்லை. வெளியூரில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ‘சென்னையில் உள்ளவர்கள் எல்லாரும் ஒவ்வொரு நாளும் பீச்சுக்குப் போய்க் கடற்காற்று வாங்குவார்கள்!’ என்று நினைக்கிறார்கள். இங்கேதான் ஒவ்வொருத்தருக்கும் தம் குடும்பச் சுமையைக் தாங்கும் பணியில் ஈடுபட்டு உழைப்பதற்கு இருபத்து நாலு மணிநேரம் போதுவதில்லையே!

திருவல்லிக்கேணியில் இருந்தபோது எப்போதாவது பீச்சுக்குப் போவதுண்டு. மங்தை வெளிக்குக் குடிவந்த பிறகு பீச்சாவது,காற்றாவது!

ஒரு சமயம் இரவு படுத்தால் தூக்கம் வராமல் இருந்தது. ஒருநாள் பார்த்தேன்; இரண்டு நாள் பார்த்தேன்; தூக்கம் இல்லை. ஒருவாரம் ஆயிற்று; தூக்கம் வரவில்லை. இதை அறிந்த ஒருவர். “விடியற்காலையில் எழுந்து நடவுங்கள்; துாக்கம் சுகமாக வரும்” என்றார். “ஆகட்டும்” என்றேன். ஆனால் நான் எழவும் இல்லை; நடக்கவும் இல்லை. அவர் தாமும் என்னுடன் வருவதாகச் சொன்னார். மிகவும் அக்கறையுடன் ஐந்து மணிக்கு வந்து என்னை எழுப்புவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/141&oldid=1152938" இலிருந்து மீள்விக்கப்பட்டது