பக்கம்:புது டயரி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

புது டயரி


நண்பர் ஒருவர் நாள்தோறும் தம் காரில் பீச்சுக்குப் போய் ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஒரு மைல், இரண்டுமைல் போய்விட்டு வந்து காரில் வீடு திரும்புவார். அவருடன் என் மகனும் போனான். ஒருநாள் என்னையும் அவர் அழைத்தார்; போனேன். சில நாள் தொடர்ந்து சென்றேன்.

அந்த இரண்டு பேரும் இளைஞர்கள். காரை நிறுத்தி விட்டு வேகமாக நெடுந்துாரம் போய்விடுவார்கள். நான் சுமாரான வேகத்துடன் போவேன். பல பேர் இப்படிக் காாில் வந்து நிறுத்திவிட்டு உலாத்துவதைக் கண்டேன்.

இதில் ஒரு விசேஷம். பீச்சில் காலையில் நடக்கும்போது சில பெரிய மனிதர்களைச் சந்தித்தேன். ஹைக்கோர்ட்டு ஜட்ஜுகள் வந்தார்கள். அரசியல் தலைவர்கள் வந்தார்கள். அவர்களைச் சந்தித்தபோது, “நீங்களும் வாக்கிங் வருகிறீர்களா?” என்று விசாரிப்பார்கள். அந்தத் தோழமை விசாரிப்பில் எனக்கு ஏதோ புதிய பெருமை வந்துவிட்டது போல் தோன்றும். ஒரு நாள் போகாவிட்டால், “ஏன் நேற்று வரவில்லை?” என்று விசாரிப்பார்கள். ஹைக் கோர்ட்டு ஜட்ஜூ ஒருவர் இப்படி அக்கறையோடு நம்மை விசாரிக்கும்போது அவருடைய அன்பான சந்திப்பைப் பெறுவதற்காவது நடக்க வேண்டாமா என்று தோன்றும்.

ஆம் காலையில் பெரிய மனிதர்களின் முகத்தில் விழிப்பதே மனத்துக்கு ஊக்கம் தரும் செயல் அல்லவா? பெரிய பணக்காரர்கள், உடம்பின் கணத்தைச் சுமக்கமாட்டாத சேட்டுகள், இளம் பிள்ளைகள், இப்படி யார் யாரோ வந்தார்கள். எழுபது வயசானவர்கள் வந்தார்கள். “இந்த நடையினால்தான் இந்த வயசிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்!” என்று எண்ணிக் கொள்வேன். அப்போது திரு. வி. க. சொன்னது நினைவுக்கு வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/143&oldid=1152942" இலிருந்து மீள்விக்கப்பட்டது