பக்கம்:புது டயரி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

புது டயரி

 அணிகிறோம். அவற்றிற்கு மேல் மாலையைக் கழற்றாமல் போட்டுக் கொண்டே இருந்தால் நன்றாக இருப்பதில்லை.

மற்றொரு சங்கடம், ரோஜாப்பூ மாலைகளில் சிவப்பு நூலைச் சுற்றியிருப்பார்கள். ஈரமான பூ ஆதலால் அந்த நூல் நனைந்திருக்கும். அந்த மாலையை அணிந்துகொண்டு ஐந்து நிமிஷம் அப்படியே இருந்தால் போதும்; சிவப்பு நூலின் சாயம் வரிவரியாய்ச் சட்டையில் படிந்துவிடும். இப்படி என் கதர்ச் சட்டையில் மாலை அணிந்த சுவடுகளை ஏற்றுப் பரிதவித்த சமயங்கள் பல.

மாலையைப் போட்டவுடன் கழற்றுவதைப் பற்றி ஒரு கூட்டத்தில் ஒரு வாக்குவாதமே நடந்தது. அமரர் திருப்புகழ் மணி டி. எம். கிருஷ்ணசாமி ஐயரவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கினார். நானும் வேறு இரண்டு புலவர்களும் அந்தக் கூட்டத்தில் பேசினோம். தலைவருக்கு மாலை போட்டவுடன் அதை அவர் கழற்றிவைத்து விட்டார். முதலில் பேசிய புலவரோ போட்ட மாலையைக் கழற்றவில்லை; போட்டுக்கொண்டே பேசினார். அதோடு நிற்கவில்லை; “நம்மிடம் மதிப்பு வைத்துத் தம்முடைய அன்புக்கு அறிகுறியாகச் சபையை நடத்துவோர் மாலையைப் போடுகிறார்கள். அதைக் கழுத்தில் போட்டுக்கொண்டிருப்பதுதான் மரியாதை, முகத்தில் அடிப்பதுபோல உடனே கழற்றி வைத்துவிட்டால் அந்த அன்பை உணா்ந்ததாகாது” என்று தாம் மாலையை கழற்றாமல் போட்டுக் கொண்டிருப்பதற்குரிய காரணம் ஒன்றைச் சொன்னார்.

அவருக்கு அடுத்தபடி பேசின புலவர் மாலை போட்டவுடன் கழற்றி வைத்தார்: “நமக்கு மிகவும் அன்பாக மாலை போடுகிறார்கள். அதைப் போட்டுக்கொண்டே இருந்தால் இதழ்கள் உதிர்ந்துவிடும். மாலை கசங்கிப் போகும். மரியாதையைக் காட்ட அவர்கள் போட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/147&oldid=1153013" இலிருந்து மீள்விக்கப்பட்டது