பக்கம்:புது டயரி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழுத்தில் விழுந்த மாலை

141


நாம் வணங்கி ஏற்றுக்கொள்கிறோம், நானே அணிய வேண்டும் என்ற சுயநலம் எனக்கு இல்லை. என் வீட்டில் உள்ள பெண்களும் குழந்தைகளும் அணிந்துகொண்டால் அழகாயிருக்கும். ஆகையால் கசங்காமல் கழற்றி வைத்தேன். அன்பர்கள் போட்ட மாலையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதுதான், அவர்கள் அன்பைப் பாராட்டுவதற்குச் சிறந்த அடையாளம் என்று நான் கருதுகிறேன்” என்று தம் கருத்தைச் சொன்னார்.

இறுதியில் திருப்புகழ் மணியவர்கள் பேசினார். “புலவர் அவர்கள் மாலையைக் கழற்றாமல் போட்டுக்கொள்வதுதான் மரியாதை என்று சொன்னார். கழற்றினவர்கள் எல்லோரும் போட்டவர்களை அவமதித்து விட்டார்கள் என்று தொனிக்கும்படி பேசினார். அன்பினால் ஒருவர் மற்றொருவரைப் புகழ்வதும் மரியாதை செய்வதும் வழக்கம். அப்படிப் புகழும்போதோ, உபசாரம் செய்யும் போதோ சிறிதும் அடக்கம் இல்லாமல் அந்தப் புகழ் முழுவதற்கும் நாம் உரியவர்கள் என்று காட்டிக்கொள்ளலாமோ! ‘நீங்கள் அதிகமாகப் புகழ்கிறீர்கள்; எனக்கு அவ்வளவு தகுதி இல்லை’ என்று சொன்னால் அவர்களை அவமதித்ததாக ஆகுமா? அது நம் அடக்கத்தைத் தானே காட்டும்? அதுபோல, அவர்கள் தம் அன்பைக் காட்ட அழகான மாலை போடுகிறார்கள். ‘எனக்கு இது ஏற்றதுதான்’ என்று போட்டுக்கொண்டே இருந்தால் அகங்கார உணர்ச்சியென்று தோன்றும். கழற்றி வைத்தால், ‘இதைப் போட்டுக்கொள்ள எனக்குத் தகுதி இல்லை’ என்ற அடக்க உணர்ச்சியைக் காட்டுவதாக இருக்கும்” என்றார்.

சில சமயங்களில் துணிச்சலாக ரோஜாப்பூ மாலையைப் போட்டுக்கொண்டே இருந்தால் வீட்டுக்குப் போகும்போது வெறும் நாருடன்தான் போவோம். சென்னையில் அந்த நாருக்குத்தான் கிராக்கி. பெண்பிள்ளைகள் நாரைப் பத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/148&oldid=1153014" இலிருந்து மீள்விக்கப்பட்டது