பக்கம்:புது டயரி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

புது டயரி

 மாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். நாரின் பெருமையை நானும் அறிவேன். வெளியூரில் யாரேனும் நண்பர்கள் என்னுடன் பேசிப் பழகிய பிறகு என் பழக்கத்தால் தாங்கள் பயன்பெற்றதாகச் சொல்வார்கள். அப்போது, “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றது போல உங்களுடன் பழகி எங்களுக்கும் மதிப்பு உண்டாயிற்று” என்பார்கள். நான் உடனே, "நீங்கள் நார் என்பது உண்மை பூ உதிர்ந்துவிடும். நார்தான் நிற்கும். நான் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறவன். நீங்கள் நிலையாக இங்கே இருப்பவர்கள்” என்பேன்.

ரோஜாப்பூ மாலைக்குப் பதிலாக மல்லிகை மாலை, செவ்வந்திமாலை வாங்கிப் போட்டால் பூ உதிர்வதில்லை. ஆனால் அப்போதும் ஆபத்து இருக்கிறது. எங்கள் ஆசிரியப் பெருமான் சொன்ன நிகழ்ச்சி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.

சைவ மடாலயங்களில் விழாக்காலங்களில் ஆதினத் தலைவர்கள் கொலு இருப்பது வழக்கம், ஞானாசிரியராகிய தலைவர் மலரால் அலங்கரித்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பர். அவருக்கு மாலைகள் அணிந்து சுற்றிச் சூழப் பூச்சரங்களாலும் பூப்பட்டைகளாலும் அலங்கரித்துப் பூசை செய்வார்கள். உற்சவமூர்த்திக்கு அலங்காரம் பண்ணுவதுபோலச் செய்வார்கள். குருமகா சந்நிதானம் கண்ணை மூடிக்கொண்டு ஆடாமல் அசையாமல் வீற்றிருப்பது வழக்கம்.

பழங்காலத்தில் திருவாவடுதுறையில் ஒரு சமயம் கொலு நடைபெற்றது. அப்போது இருந்த ஞானாசிரியரைக் கொலுவில் அமர்த்தி வழிபட்டார்கள். செவ்வந்திப் பூவும் மல்லிகைப்பூவும் கொண்டு சுற்றிச் சூழ அலங்களித்திருந்தார்கள். கொலு மூன்று மணிக்குமேல் நடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/149&oldid=1153021" இலிருந்து மீள்விக்கப்பட்டது