பக்கம்:புது டயரி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழுத்தில் விழுந்த மாலை

143

 கொலு முடிந்தவுடன் மெல்லச் சுற்றியுள்ள அலங்காரங்களைக் கலைக்கச் செய்து மகா சந்நிதானம் அவர்கள் கீழே இறங்கி வந்தார் சற்றே சினத்தோடு, “என் உடம்பெல்லாம் பாருங்கள்” என்றார் சிறிய சிறிய தடிப்புகள் இருந்தன. “இத்தனை நேரமும் செவ்வெறும்புகள் கடிப்பதைப் பொறுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பூவைக் கவனித்துப் பார்த்து அலங்காரம் பண்ணக்கூடாது?” என்று கேட்டாராம். மல்லிகைப்பூப் பட்டைகளைச் சாத்துவதற்குமுன் கீழே வைத்திருக்கிறார்கள். அவற்றில் செவ்வெறும்புகள் புகுந்துகொண்டன. அப்படியே கொலுவில் வைத்துவிட்டார்கள்! பாவம்! ஞானாசிரியர் அத்தனை நேரம் எறும்புக்கடியைச் சகித்துக் கொண்டிருந்திருக்கிறார்! அவருடைய உயர்ந்த பக்குவத்தை அது காட்டியது. தேகம் வேறே, நாம் வேறே என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் அத்தனே நேரம் சகித்துக்கொண்டிருக்க முடியுமா?

மாலைக்குப் பதிலாக ஆடைகளைப் போடும் வழக்கம் இப்போது வந்திருக்கிறது. நல்லதுதான். மாலை சிறிது நேரத்தில் வாடிவிடும். ஆடை பிறகும் பயன்படும். இருந்தாலும் மாலை போடுவதைத்தான் மரியாதையாக நினைக்கிறார்கள். மாலை மரியாதை என்றே சொல்கிறது. வழக்கம் அல்லவா?

ஒரு சமயம் மாலையும் ஆடையும் எதிர்பாராத வகையில் எனக்குக் கிடைத்தன. அது மிகவும் சுவையான நிகழ்ச்சி.

மயிலாப்பூரில் தெற்கு மாடவீதியில் வெள்ளீசுவரர் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அங்கே ஒரு சமயம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடினார்கள். அப்போது இந்து சமய அறநிலைய ஆணையராக இருந்த திரு நரசிம்மன் அவர்கள் தலைமை தாங்கினார். நானும் வேறு சிலரும் பேசினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/150&oldid=1153023" இலிருந்து மீள்விக்கப்பட்டது