பக்கம்:புது டயரி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

புது டயரி

 கூட்டம் தொடங்குவதற்குமுன் தலைவருக்கும் பேச்சாளர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்து வைத்தார்கள் கோயில் அறங்காவலர்கள். தலைவருக்குப் பிரசாதமாக மாலையையும் ஒரு பட்டையும் போட ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லோரும் சுவாமி சந்நிதியில் நின்று தரிசனம் செய்தோம். பிரசாதம் வழங்கும்போது ஒரு தட்டில் பிரசாதம், மாலை, பட்டு எல்லாம் எடுத்துக்கொண்டு திரு. நரசிம்மனுக்கு முன்வந்தார்கள். அவர் சட்டென்று அந்தப் பட்டை எடுத்து அருகில் நின்றுகொண்டிருந்த எனக்குப் போட்டுவிட்டு மாலையையும் எடுத்துப் போட்டார். அறங்காவலர்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது, போட்டதை எடுத்து மறுபடியும் அவருக்குப் போடுவது நாகரிகமாகத் தோன்றவில்லை.

சுவாமி தரிசனம் ஆனபிறகு கூட்டம் தொடங்கியது. தலைவர் உரை முடிந்ததும் நான் பேசத் தொடங்கினேன்.

“இப்போது நாம் ஒட்டக்கூத்தர் திருநாளைக் கொண்டாடுகிறோம். சிறிது நேரத்துக்குமுன் இறைவன் சந்நிதியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது ஒட்டக்கூத்தர் காலத்து நிகழ்ச்சி ஒன்றை நினைக்கச்செய்தது. ஒட்டக்கூத்தர் மூன்று சோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர். அவர்களில் இடைப்பட்டவனாகிய இரண்டாம் குலோத்துங்கனுக்கு அவர் ஆசிரியராகவும் இருந்தார்; அவைக்களப் புலவராகவும் விளங்கினார். ஒருநாள் அரசவையில் பல புலவரும் பிறரும் கூடியிருந்தார்கள். குலோத்துங்கன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். ஒட்டக்கூத்தர் அவன் புகழைப் பாடத் தொடங்கினார். தன் அரண்மனை வாயிலில் தொங்கும் ஆராய்ச்சிமணியின் நா என்றும் அசையாதபடி (யாருக்கும் குறையில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/151&oldid=1153027" இலிருந்து மீள்விக்கப்பட்டது