பக்கம்:புது டயரி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

புது டயரி

 தனியே எழுதிப் பாராயணம் செய்யாமலே, அந்த நாமங்களைச் சொல்லவும் கேட்கவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நாம் தெருவழியே நடந்து போகும்போது, “ஏ முருகா, ஏ ராமா, ஏ வேங்கடேசா, ஏ சிவசுப்பிரமணியா” என்று ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள்; அப்போது அந்தப் பெயர்களெல்லாம் இறைவன் திருநாமங்களாய் இருப்பதனால், அவனுடைய பல திருநாமங்களைச் செவியேற்கும் நிலை நமக்கு உண்டாகிறது. உண்மையான பக்தி உடையவர்கள் அந்த நாமங்களைக் கேட்டு மனம் உருகுவார்கள். “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று மாணிக்கவாசகர் பாடுவதை நினைத்துக் கொள்வார்கள்.

இறைவன் திருநாமங்களை மச்களுக்கு இட்டு வழங்குவதன் நோக்கமே மாறிவிடுகிறது. அந்த நாமங்களைச் சிதைத்து வழங்குவதனால், வீரராகவ செட்டி என்ற பெயர் எங்கே? விராட்டி என்ற சிதைவு எங்கே? வீரராகவன் என்ற திருநாமம் நம்மை இராமாயணத்தை நினைக்கச் செய்கிறது; திருவள்ளுருக்கு அழைத்துச் செல்கிறது; விராட்டி என்ற வார்த்தையோ—?

அருமையான பெயர்களை எப்படியெல்லாம் சிதைத்து வழங்குகிறோம்! சுப்பிரமணியன் என்ற பெயர் இந்தச் சிதைவு முறையில் அகப்பட்டு எத்தனை வகையான வடிவங்களை எடுத்துக்கொள்கிறது. சுப்பு என்ற சிதைவுதான் அதிகம். சுப்பிரமணி, சுப்பாமணி, சுப்பிணி, சுப்புமணி, சுப்பியா, சுப்பாணி, சுப்புண்டு என்று அந்தப்பெயர் நசுங்கி உருக்குலைந்து பல வடிவங்களில் நிலவுகிறது. பரமேசுவரன் - பம்மேச்சன் ஆகிறான். வேங்கடராமன், வெங்கிட்டு, வெங்கிட்டா, வெங்கட், வெங்கலக்குண்டு ஆகிறான். மகாலக்ஷ்மி மாச்சி, மாஜி, மசும் ஆகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/163&oldid=1153204" இலிருந்து மீள்விக்கப்பட்டது