பக்கம்:புது டயரி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

புது டயரி

 முடிகிறது. உமாமகேசுவரன் என்பதுதான் உம்மாச்சி ஆயிற்று என்று நமக்கு எங்கே விளங்குகிறது?

மக்களின் பெயர்கள் மட்டும் இந்தப் பாடுபடுகின்றன என்று எண்ண வேண்டாம். ஊர்களின் பெயர்களுக்கும் இந்தக் கதி நேர்வதுண்டு.

ஏழு பெரிய வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன். அவன் தகடூர் என்ற ஊரில் இருந்து ஆண்டு வந்த சிற்றரசன். இன்று அந்தத் தகடூரே தர்மபுரி என்று வழங்குகிறது. அவன் தகடுரில் கோட்டை கட்டி வாழ்ந்தான். அந்தக் கோட்டை இருந்த இடம் இன்றைக்குத் தர்மபுரிக்கு அருகில் இருக்கிறது. அந்த உத்தமனாகிய வள்ளல் வாழ்ந்திருந்த கோட்டையை அதமன் கோட்டை என்று வழங்கினார்கள் மக்கள். அதுவே அதன் இயல்பான பெயர் அன்று. அதியமான் கோட்டை என்ற பெயரே அப்படிச் சிதைந்து வழங்கியது. அதியமானை மக்கள் எச்சில் வாயால் அதமனாக்கிவிட்டார்கள். நல்ல வேளை இப்போது பழையபடி அதியமான் கோட்டை என்று அதன் பழைய உருவத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழைய ஐயங் கொண்ட சோழபுரம் என்ற ஊர் இருக்கிறது. அதற்கு இன்று வழங்கும் பெயரைக் கேட்டாலே சங்கடமாக இருக்கிறது. ஆமாம்! இன்று அது பழைய சங்கடம் என்று வழங்குகிறது. குலோத்துங்க சோழன் இருப்பு என்ற ஊரின் பெயர் குளத்துக்கிருப்பு ஆகிவிட்டது. கோபிநாதப் பெருமாள் கோவில் கோணப் பெருமாள் கோவில் ஆகிறது. பழைய காலத்தில் புலவர்கள் ஊர்களின் பெயர்களைப் பாட்டில் வைக்கும்போது பாட்டின் ஒசைக்கு ஏற்பக் குறுக்கி அமைப்பார்கள். தஞ்சாவூரைத் தஞ்சையென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/165&oldid=1153206" இலிருந்து மீள்விக்கப்பட்டது