பக்கம்:புது டயரி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

புது டயரி

 கிறார்கள். இந்த இரண்டில் இராமேசுவரத்துக்கு ஏன் தேவை என்று பெயர் வந்தது என்பதற்கு விளக்கம் தேவை. தேவைஉலா என்று இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பற்றிய பிரபந்தம் ஒன்று உண்டு. “வளமருவு தேவை அரசே” என்று தாயுமானவர் அங்கே எழுந்தருளியுள்ள மலைவளர் காதலியைப் பாடுகிறார். இந்த இடங்களில் தேவை என்ற பெயர் வருகிறது. அது எதன் சிதைவு என்று எல்வளவோ காலம் ஆராய்ந்து பார்த்தேன்; தெரியவில்லை. கடைசியில் தேவநகரம் என்பதன் மரூஉ அது என்று தெரிய வந்தது. ராஜாராம் ராவ் என்பவர் இராமநாதபுர ஸமஸ்தானத்து வரலாற்றைப் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதில் இராமேசுவரத்துக்குத் தேவ நகரம் என்ற பெயர் உண்டு என்று குறித்திருக்கிறார்.

இாாமநாதபுரத்துக்கு முகவை என்ற பெயர் இலக்கியங்களில் வழங்குகிறது. முகவாபுரி என்றும் இருக்கிறது. இராமநாதபுரத்துக்கும் முகவைக்கும் என்ன தொடர்பு? சேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்திலுள்ள பெருமானாகிய இராமநாதர் பெயரால் தம் தலைநகரத்துக்கு இராமநாதபுரம் என்று பெயர் வைத்தார்கள். செய்யுளில் அது முகவையான காரணம் பல பேருக்குத் தெரியாது.

இராமேசுவரத்துக்குப் போகிறவர்கள் பழங்காலத்தில் இராமநாதபுரம் சென்று மன்னரைக் கண்டு விடைபெற்றுப் பிறகு இராமேசுவரம் சென்று தரிசித்தார்கள். “சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனமாச் செப்பலாமே” என்று ஒரு பழம் பாட்டில் வருகிறது. இராமபிரான் தான் கட்டிய அணைக்கு மறக்குல வீரன் ஒருவனைக் காவலனாக வைத்தான் என்றும், சேதுவைக் காத்த அந்த மறவனுடைய பரம்பரையினரே சேதுகாவலர், சேதுபதி என்ற பட்டத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/167&oldid=1153209" இலிருந்து மீள்விக்கப்பட்டது