பக்கம்:புது டயரி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

புது டயரி


வதில்லை; குரு. சுப்பிரமணிய ஐயர் என்றே எழுதுவார். கு. சுப்பிரமணிய ஐயர் என்று போட்டு வழக்கமானால் தலை எழுத்துக்களை மட்டும் குறிக்கும்படி நேரும்போது நாற்றம் அடிக்கும் அல்லவா?

பன்மொழிப் புலவர் ஒருவர் ஒரு நூல் எழுதினார். அதில் தம் பெயரை விரிவுபடுத்தி ஊர்ப் பெயர், தந்தையார் பெயர், தம் பெயர் எல்லாவற்றையும் முழுமையாகப் போட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தம்முடைய நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அனுப்பினார். முகப்புப் பக்கத்தைப் பிரித்துப் பார்த்தேன். பின்னத்துார்ச் சாரநாதருடைய குமாரர். சுந்தரம் (உண்மைப் பெயர்களை இங்கே சொல்லவில்லை. ஆனால் முதலெழுத்துக்கள் மாத்திரம் அந்தப் பெயர்களில் உள்ளனவை.) என்று விளக்கமாக இருந்தது. என் மூளையில் ஒரு குயுக்தி தோன்றியது. புத்தகத்தை அளித்த அன்பரைப் பார்த்து, “ஐயா, இவர் தம் பெயரின் முதற்குறிப்பை எப்படிப் போடுவார்?” என்று கேட்டேன். அவர் சற்றே யோசித்து, பின்னத்துாரின் முதலெழுத்தாகிய பி என்பதையும், சாரநாதர் என்பதன் முதல் எழுத்தாகிய சா என்பதையும், சுந்தரம் என்பதன் முதல் எழுத்தாகிய சு என்பதையும் சேர்த்து, ‘பி.சா. சு’ என்று சொல்லும்போதே சிரித்து விட்டார். ‘பிசாசு’ என்று சொல்லி நானும் சிரித்தேன். அதன் விளைவு என்ன ஆயிற்று, தெரியுமோ? அந்த அன்பர் புத்தக ஆசிரியரிடம் போய் இந்த வேடிக்கையைச் சொல்லியிருக்கிறார். அந்த ஆசிரியர் அத்தனை புத்தகப் பிரதிகளின் முகப்புத்தாளையும் கிழித்து எறிந்துவிட்டுப் புதிய தாளைச் சேர்த்தார். அதில் தம் பெயரை, P. S. சுந்தரம் என்று அச்சிடச் செய்துவிட்டார்.

கம்பம் போடைய நாயக்கர் பிள்ளை திருமலை நாயக்கர் தம் பெயரில் ஊர்ப் பெயரின் முதலெழுத்தைச் சேர்க்காமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/169&oldid=1153217" இலிருந்து மீள்விக்கப்பட்டது