பக்கம்:புது டயரி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸார் பேப்பர்!

165

 மணிக்குப் பேப்பரும் கையுமாக எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

பத்திரிகை படிப்பதென்பது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. இளம்பிராயம் முதலே நாள்தோறும் விடாமல் பத்திரிகை படித்து வருகிறேன். இளம்பிராயம் என்றால் தொட்டில் பருவம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாலாம் பாரம் படிக்கிற காலம் முதல் அன்றாடம் பத்திரிகை படிப்பேன். அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் தினப்பத்திரிகை கிடையாது. மற்ற நாட்களில் படிப்பேன்.

ஊரில் படித்துக்கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் காலப் பத்திரிகைகள் இல்லை. சென்னையில் மாலையில் வெளிவரும் செய்தித்தாள் தபாலில் மறுநாள் வெளியூருக்கு வரும். தபாலில்தான் வரும், கடைகளில் பத்திரிகைகளை விற்பதில்லை. சந்தா செலுத்தித் தபால் மூலம் வருவித்துத்தான் படிக்க வேண்டும். ரேடியோ இல்லாத காலம். ஆகவே எல்லாரும் பத்திரிகையை எதிர் பார்த்து நிற்பார்கள். எல்லாரும் பத்திரிகை வருவிக்க மாட்டார்கள். கிராமத்தில் இரண்டொரு பேர்களே வருவித்துப் படிப்பார்கள்; படித்துவிட்டுப் பிறருக்கும் படிக்கக் கொடுப்பார்கள்.

எங்கள் ஊரில் ஒரு செட்டியார், காங்கிரஸ்காரர், பத்திரிகை வாங்கினார். பிறகு நிறுத்திவிட்டார். இளைஞர்களெல்லாம் சேர்ந்து ‘திலகர் வாசகசாலை’ என்று ஆரம்பித்தோம். அதற்குச் சுதேசமித்திரன் பத்திரிகையை வருவித்தோம். பாதிச் சந்தாவுக்கு அதைக் கொடுத்தார்கள். வாசகசாலை வேலை செய்யாமல் நின்ற பிறகும் அது அரை விலையிலே வந்துகொண்டிருந்தது. அந்தச் செட்டியாரே வாசகசாலையின் தலைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/172&oldid=1153221" இலிருந்து மீள்விக்கப்பட்டது