பக்கம்:புது டயரி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸார் பேப்பர்!

167

 வாசிப்பேன். தமிழ் நாட்டுச் செய்திகளை அதில்தானே பார்க்க முடியும்?

தமிழ் நாட்டில் எங்காவது வெளியூர்களுக்குப் போய் விட்டுச் சென்னைக்கு வருவேன். அநேகமாகக் காலை வண்டியில்தான் திரும்புவேன். வண்டி அரக்கோணத்துக்கோ, சின்ன ரெயிலானல் செங்கற்பட்டிற்கோ வரும்போது பேப்பர் வாங்கிப் படிப்பேன். இப்போதுதான் ஒவ்வொரு நாளும் காலப் பத்திரிகையைத் தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்குகளிலும் வாங்கலாமே! அந்த விஷயத்தில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிற அளவுக்கு மற்ற மாநிலங்கள் முன்னேறியிருப்பதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் அன்றைப் பத்திரிகையைப் படிக்கலாம். ஆனால் அதற்குப் பொறுமை இருப்பதில்லை. அரக்கோணத்திலோ, செங்கற்பட்டிலோ பேப்பர் வாங்குவேன். ஹிந்து வாங்கமாட்டேன். அதைத்தான் வீட்டில் போய்ப் பார்க்கப் போகிறேனே! ஆகவே வேறு எதையாவது வாங்கிப் படிப்பேன். எதிர்ப் பலகையில் அமர்ந்திருக்கும் ஆசாமி என்னைப்போலவே பத்திரிக்கை படிக்கும் ஆவலுள்ளவராக இருப்பார். ஆனால் என்னைப் போல அவசரக் குடுக்கை அல்ல. வீட்டுக்குப் போய்ப் படிக்கலாம் என்ற எண்ணமுடையவராக இருக்கலாம். என்றாலும் என் கையில் பத்திரிகையைக் கண்டதும் அவருடைய பத்திரிகைக் காதல் மூண்டெழும். ஆனால் காசு கொடுத்து ஒன்றை வாங்கமாட்டார். ஒரு குழந்தை தின்பண்டம் தின்கிறபோது அது கிடைக்காத மற்றொரு குழந்தை அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்குமே, அப்படிப் பார்த்துக்கொண்டிருப்பார். நான் பக்திரிகையை விரித்து என் முகத்தை மறைத்துக் கொண்டு படிப்பேன். முதல் பக்கத்தை முடித்துவிட்டு உள்பக்கங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசாமி குனிந்து குனிந்து முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/174&oldid=1153223" இலிருந்து மீள்விக்கப்பட்டது