பக்கம்:புது டயரி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸார் பேப்பர்!

169

 எனக்குத் தெரியாது. ஆனால் யாராவது வீட்டில் பத்திரிகையில ஒரு பகுதியை எடுத்துககொண்டு மற்றதை எனக்குக் கொடுத்தால் எரிச்சல் எரிச்சலாக வரும்.

வாசகசாலை முதலிய பொது இடங்களில் படிக்கிறவர்கள் தனித்தனியே பிரித்துப் படிப்பார்கள்; ஒவ்வொரு தாளாகக் கிழித்துப் படிப்பார்கள். காசு கொடுத்து வாங்காமல் ஒசியில் படிக்கிறவர்கள் பழக்கம் அது நான் சொந்தமாக விலை கொடுத்துப் பத்திரிகை வாங்கும்போது அதை என் விருப்பப்படியே படிப்பதை யார் தடுக்க முடியும்?

ஒரு சமயம் செங்கற்பட்டில் பத்திரிகை வாங்கினேன். அதை என் ஆசனத்தில் வைத்துவிட்டுச் சிறிது அந்தப் பக்கம் போனேன். அருகில் இருந்த நண்பர், “படிக்கலாமா?” என்று கேட்டார். “தாராளமாகப் படிக்கலாம்” என்றேன். அவர் எடுத்துப் படிக்கத் தொடங்கினார். நான் போய்விட்டு இரண்டு நிமிஷத்தில் வந்தேன். அந்த மனிதர் வெகு சுவாரசியமாகப் பத்திரிகையை விரித்து முகத்தை மறைத்தபடி வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். நான் வந்தது தெரிந்திருக்கலாம். ஆனாலும் அவர் பேப்பரை என்னிடம் கொடுக்க வில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டவரைப் போல அதில் ஆழ்ந்திருந்தார். நான் சிறிது கனைத்துக் கொண்டேன். அது அவர் காதில் விழுந்தாலும் விழாதவர் போலவே படித்துக் கொண்டிருந்தார். நானும், அவர் என்னதான் செய்கிறார் பார்க்கலாம் என்று இருந்தேன். தாம்பரம் வருகிறவரைக்கும் அந்தப் பத்திரிகையைச் சக்கை வேறு சாறு வேறாக உறிஞ்சிவிட்டு, தாம்பரம் ஸ்டேஷன் வந்தவுடன், “மன்னிக்க வேண்டும். இந்தாருங்கள்” என்று கொடுத்தார். உடனே அங்கே இறங்கி விட்டார். இல்லாவிட்டால் மேலும் படித்துக் கொண்டே இருந்திருப்பார். அவர் படிக்கிற ஜோரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/176&oldid=1153225" இலிருந்து மீள்விக்கப்பட்டது