பக்கம்:புது டயரி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

புது டயரி

 தானே என்று வேடிக்கையாகச் சமாதானம் சொல்லலாம். ஆனால் பொருள் எப்படியெல்லாம் விபரீதமாகிவிடுகிறது! இதனால்தான், “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்ற பழமொழி எழுந்தது. எழுதினவன் செய்தது பிரதிபேதம்; படித்தவன் பண்ணினது பாடபேதம்.

சொற்பொழிவாற்றுகிறவர்கள் பாடம் பண்ணின பாட்டில் ஒரு சொல்லையோ தொடரையோ நினைவு வராமையால் மாற்றிச் சொல்லிவிடுவார்கள். அதைக் கேட்டவர்கள் அதுவும் ஒரு பாடம் என்று எண்ணுவார்கள். அப்படித்தான் பாடபேதங்கள் வந்திருக்கின்றன.

எழுதும்போது லகரத்துக்கு ளகரமும் ளகரத்துக்கு லகரமும் வந்துவிட்டால் நேர் மாறான பொருள் உண்டாகும் இடம் பல. தெரியாத பையன் கடிதம் எழுதுகிறான். ‘உங்கள் உடம்பைப் பார்த்துக் கொல்ல வேண்டும்’ என்று எழுதுகிறான். பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எழுத நினைத்தவன், பிழையாக அப்படி எழுதிவிடுகிறான். இரண்டுக்கும் எத்தனை வேறுபாடு!

பேச்சிலேதான் நாம் எத்தனை பிழைகளைப் பண்ணுகிறோம் தமிழுக்கே சிறப்பான எழுத்து என்று நாம் பெருமையடித்துக் கொள்ளும் ழகரம் பலபேருக்குச் சரியாக வருவதில்லை. அதைச் சிறப்பு ழகரம் என்று சிலர் சொல்வார்கள். ஒரு பேராசிரியர் சிறப்பு ழகரத்தைப்பற்றிப் பேசுவார். “தமிளுக்கே உரிய சிறப்பு ளகரம் எப்படி யெல்லாம் கவிஞர்கள் வாக்கில் அளகாக வருகிறது! குளலும் யாளுமென் றினையன குளைய மளலை மென்மொளி கிளிக்கிருந்தளிக்கின்ற மகளிர் என்பதில் சிறப்பு ளகரம் எவ்வளவு எளிலாக அமைந்திருக்கிறது!” என்பார். அவருக்கே தாம் தவறாகச் சொல்கிறோமே என்று தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/203&oldid=1153378" இலிருந்து மீள்விக்கப்பட்டது