பக்கம்:புது டயரி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற இடம் எல்லாம்

27

 சொன்னார். ‘காந்தியடிகள் எப்போது எங்கே சொன்னார்?’ என்று ஆராய நான் முற்படவில்லை. யார் சொன்னால் என்ன? என் செருப்பைத் தொலையாமல் நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அந்த நண்பர் தம் கருத்தையே காந்தி சொன்னதாகப் பொய் சொன்னால்தான் என்ன? அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. “என்ன வழி? சொல்லுங்கள்” என்று கேட்டேன், “கூட்டத்துக்குப் போனால் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போங்கள். உள்ளே போகும்போது செருப்பைப் பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள். எங்கே உட்காருகிறீர்களோ, அங்கே அந்தப் பையைக் கீழே போட்டு அதன்மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் செருப்பைப் பைக்குள்ளே வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. கையில் எடுத்துக்கொண்டு. போனால் உள்ளே கொண்டுபோக முடியாது. ஆகையால் அதை மறைத்துக்கொண்டு போக இப்படி ஒரு வழி சொல்லியிருக்கிறார் காந்தி” என்றார்.

“இதற்கெல்லாம் காந்தியை ஏனையா இழுக்கிறீர்?” என்று சொல்லியிருப்பேன். சொல்லத் துணிவு வரவில்லை. அந்த மனிதர் சொன்ன தந்திரம் நல்லதுதான். ஆனால் கூட்டத்தில் சொற்பொழிவைக் கேட்கப் போகிறவர்கள் அப்படிச் செய்யலாம். மேடையின்மேல் ஏறிப் பேசப் போகிறவர்கள் அப்படிச் செய்யலாமா?

ஒரு முறை இந்தத் தந்திரத்தை மேற்கொண்டேன். கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பேசப் போனேன். மேடைக்குப் போவதற்குமுன் செருப்பைப் பையில போட்டுக்கொண்டு மேடைக்குப் போய் நான் அமரும் நாற்காலிக்கு அருகில் அந்தப் பையை வைத்துக் கொண்டேன். ஏதோ புத்தகம் கொண்டு வந்திருப்பதாக மற்றவர்கள் நினைத்துக் கொள்ளட்டும் என்று நினத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/34&oldid=1149475" இலிருந்து மீள்விக்கப்பட்டது