பக்கம்:புது டயரி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

புது டயரி

 கூட்டத்தில் நானும் மற்றொருவரும் பேசினோம். எங்ககளுக்கு மாலை போட்டார்கள். பேச்சு முடிந்தவுடன் நாங்கள் எழுந்திருந்தோம். அதற்குள் அங்கிருந்த அன்பர் மேஜையின்மேல் நான் கழற்றி வைத்திருந்த மாலையை எடுத்தார். அருகில் கீழே வைத்திருந்த என் பையில் அதை வைக்கலாம் என்று பையை எடுத்திருக்கிறார், நான் வேறு எங்கோ பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அவர் பையை எடுத்ததைப் பார்க்கவில்லை. அவர் பையைத் திறந்திருக்கிறார், பையில் நான் கழற்றி வைத்திருந்த செருப்பு அவர் கையில் நான் கழற்றி வைத்திருந்த மாலை! அவர் திகைத்திருக்க வேண்டும். “என்ன ஸார் இது” என்று அவர் ஆச்சரியத்தோடு கூவியபோதுதான், அவரைத் திரும்பிப் பார்த்தேன். உண்மை தெரிந்துவிட்டது. “அது கெட்டுப் போகாமல் இருக்க...” என்று நான் சொல்லும் போதே இடிஇடியென்று சிரித்தார். அவருக்குத் தெரியுமா என்னுடைய அநுபவங்கள்? அவர் கையிலிருந்த பையையும் மாலையையும் தனித்தனியே வாங்கிக் கொண்டேன். இனி இந்தப் பைத்தியக்காரத்தனம் செய்யக்கூடாது என்று தீர்மானித்தேன். காந்தி சொன்னால்தான் என்ன? கடவுளே சொன்னல்தான் என்ன? செருப்புக்கு மாலை போடுகிற வேலை நாகரிகமாக இருக்குமா?

என்னுடைய நண்பர் ஒருவரிடம் இப்படி அடிக்கடி செருப்புத் தொலைகிற அனுபவத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். “ஒவ்வொரு தடவையும் இருபத்தைந்து முப்பதென்று பணம் கொடுத்துப் புதுச் செருப்பு வாங்க வேண்டியிருக்கிறது” என்றேன்.

“அதற்காகத்தான் நான் அதிக விலை போட்டுச் செருப்பே வாங்குவதில்லை. ஐந்து ரூபாய்க்குள்ளேதான் வாங்குவேன்” என்றார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/35&oldid=1149476" இலிருந்து மீள்விக்கப்பட்டது