பக்கம்:புது டயரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற இடம் எல்லாம்

29

 “அது நெடுநாள் வராதே!”

“மூன்று நான்கு மாதங்கள் வந்தால் போதாதா? ஒவ்வொரு தடவையும் இருபத்தைந்து ரூபாய் போட்டு வாங்கிப் பறி கொடுப்பதனால் எவ்வளவு கஷ்டம் உண்டாகிறது?”

அவர் சொல்வது நியாயமாகவே பட்டது. அவருடைய உபதேசத்தின் படியே அடுத்த முறை செருப்புத் தொலையும் போது செய்யலாம். ஏன், இப்போதே மலிவுச் செருப்பு ஒன்றை வாங்கி வைத்துவிட்டால் சமயம் வரும்போது உபயோகித்துக் கொள்ளலாம். ஐந்து ரூபாய் தானே? அது ஒரு பிரமாதமா?

அன்று மலிவாக ஐந்தரை ரூபாயில் ஒரு ஜோடி செருப்பு வாங்கினேன். நடுவில் அட்டையை வைத்துத் தைத்திருந்தார்கள். சொல்லி வைத்தாற் போல மறுநாளே நல்ல செருப்புக் கெட்டுப்போயிற்று. ஒரு கல்யாணத்தில் தான் தொலைந்து போயிற்று. ‘நான் இருக்கும்போது நீ வேறு ஒன்றை ஏன் வாங்கினாய்?’ என்ற சக்களத்திக் கோபம் போலும் மறுநாள் அலுவலகம் போகும்போது புதிதாக வாங்கின மலிவுச் செருப்பைப் போட்டுக் கொண்டு போனேன். கனமே இல்லாமல் இருந்தது அது.

அடுத்த நாள் மழை பெய்தது. மழை நின்றபிறகு அலுவலகம் போகிற போது ஈரமான ரோடில் நடந்ததனால் செருப்பு ஈரமாயிற்று. உள்ளே உள்ள அட்டை நனைந்து போகவே செருப்புக் கனமாக இருந்தது. ஒருவிதமாக அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். மாலையில் வீட்டுக்குத் திரும்பினேன். ஒரு செருப்பின் வார் அறுந்து போயிற்று. ‘காலுக்கு உதவாத செருப்பைக் கழற்றி எறி’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அந்த்ப் பழமொழி உண்டான காலத்தில் செருப்பின் விலை கால் ரூபாய் அரை ரூபாயாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/36&oldid=1149477" இலிருந்து மீள்விக்கப்பட்டது