பக்கம்:புது டயரி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

புது டயரி


இருந்திருக்க வேண்டும். அஞ்சும், இருபத்தஞ்சும் போட்டு வாங்கியிருந்தால் கழற்றி எறியத் தோன்றுமா?

வார் அறுந்த செருப்பை எப்படிப் போட்டுக் கொண்டு நடப்பது? கையிலே தூக்கிக் கொண்டு கடப்பதற்கும் அவமானமாக இருந்தது. அருகில் பத்திரிகைகள் விற்கும் கடையிருந்தது. அதுவரையில் செருப்பை எப்படியோ காலிலே இழுத்துக் கொண்டு வந்தேன். காலைப் பத்திரிகைப் பிரதிகள் சில விற்காமலே இருந்தன. நான் ஒரு பத்திரிகையை விலைக்கு வாங்கினேன். கடைக்காரன், “இது காலைப் பத்திரிகை” என்று சொன்னான். நான், “தெரியும் அதுதான் வேண்டும்” என்றேன். அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘இப்படியும் ஒரு பைத்தியம் உண்டா?’ என்று பார்த்திருக்க வேண்டும். நான் பத்திரிகையை வாங்கிக் காலில் இருந்த செருப்பை அதில் வைத்துப் பொட்டலம் கட்டிக் கொண்டேன். மடிக்கிறபோது அந்தப் பக்கத்தில் ஒருவர் படம் இருந்தது. என் செருப்பை அவர்மேல் படும்படி வைத்து மடித்தேன். அவரைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. என் கோபத்தைக் காட்டச் சரியான சந்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ச்சி அடைந்தேன். பஸ் ஏறி இறங்கி வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு செருப்புச் செப்பனிடும் தொழிலாளி இருந்தான். அவனிடம் பொட்டலத்திலுள்ள செருப்பை எடுத்துச் சரிபண்ணித் தரச் சொன்னேன். அவன், “என்னங்க ஐயா, இப்படி நனைச்சு வச்சிருக்கிங்களே? இது அட்டைச் செருப்பாச்சே ஒரு தரம் நனஞ்சா இது உபயோகப்படாதே” என்றான். “இந்த வாரை மட்டும் தைத்துக் கொடு; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றேன்.

அவன் வாரைத் தைத்துத் தந்தான். பத்திரிகைக் காகிதத்தை எறிந்துவிட்டுச் செருப்பைப் போட்டுக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/37&oldid=1149478" இலிருந்து மீள்விக்கப்பட்டது