பக்கம்:புது டயரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்ற இடம் எல்லாம்

31

 கம்பீரமாக நடந்தேன். எங்கள் வீட்டு வாசற்படிக்கு முன் போகும்போது படி தட்டியது. அப்போது ஒரு காற் செருப்பிலுள்ள அட்டை பிதுங்கி வெளியிலே வந்து விட்டது. ஒரு பக்கம் எனக்குக் கோபம். ஒரு பக்கம் திருப்தி. அது பிய்ந்ததனால் கோபம். நல்ல வேளை வீட்டு வாசலுக்கு வந்த பிறகு பிய்ந்ததே என்று திருப்தி.

மலிவுச் செருப்பு வாங்கினால் நமக்கு ஒத்து வராதென்று மறுபடியும் இருபத்தைந்து ரூபாய் போட்டுச் செருப்பு வாங்கினேன். ஒரு நாள் ஒரு வார இதழில் ஒரு குறிப்பு வந்திருந்தது. “செருப்புக் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி” என்று தலைப்பில் இருந்தது. ஆவலோடு பார்த்தேன். “கல்யாணத்துக்கோ மக்கள் கூடும் கூட்டத்துக்கோ போகும்போது பல சமயங்களில் நம்முடைய செருப்புத் தொலைந்து போகிறது. அப்படித் தொலையாமல் இருக்க ஒருவழி உண்டு. இரண்டு செருப்புக்களையும் ஒரே இடத்தில் போடாமல் தனித்தனியே வேறு வேறு இடத்தில் போட்டால் யாரும் ஒற்றைச் செருப்பை எடுத்துக் கொண்டு போக மாட்டார்கள்” என்று இருந்தது. இது நல்ல யோசனையாகப் பட்டது.

சில நாள் கழித்து ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். செருப்புகள் மலையாகக் குவிந்திருந்தன. பத்திரிகையில் வந்திருந்தபடி செய்துபார்க்க நல்ல சக்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ந்தேன். அந்தச் செருப்புக் குவியலுக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு செருப்பை வைத்தேன். மற்றொன்றை வேறு ஓரிடத்தில் வைத்தேன். அப்போது அங்கே ஒரு பையன் இருந்தான். “என்ன ஐயா, ஒற்றைச் செருப்போடு வருகிறீர்கள்?” என்று கேட்டான். “ஒன்று தொலைந்து போய்விட்டது” என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று உள்ளே போய்விட்டேன். அவன் மேலே ஏதாவது கேள்வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/38&oldid=1149480" இலிருந்து மீள்விக்கப்பட்டது