பக்கம்:புது டயரி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நோய்க்கு இடம் கொடு

ஆகா! இந்த உலகந்தான் எவ்வளவு அதிசயமானது. உலகத்தில் உள்ள மனிதர்கள்தாம் எவ்வளவு நல்லவர்கள்! நம்மிடத்தில் எத்தனை பேருக்கு அன்பு! எத்தனை பேருக்கு நாம் செளக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை! முன் பின் பாராதவர்களெல்லாம் எவ்வளவு அன்பு காட்டுகிறார்கள்! நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று இருந்த எண்ணமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டதே!

இப்படியெல்லாம் எனக்கு ஆனந்த உணர்வு எழுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? நான் இரண்டு நாள் மருத்துவமனையில் படுத்திருந்தேன்; பிறகு டாக்டர்களின் கட்டளையின்படி வீட்டில் பத்து நாள் ஒய்வு எடுத்துக் கொண்டேன். அந்தக் காலத்தில் நண்பர்களுக்கு என்னிடம் உள்ள அன்பு வெள்ளத்தை உணர்ந்து மகிழ்ச்சியால் பொங்கினேன். கோபத்தால் பொங்காமல் மகிழ்ச்சி பொங்கும் படி என்னை ஆக்கின. அந்த நோய்க்கு நான் மிக மிக நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். “நோய்க்கு இடம் கொடேல்” என்று ஒளவைப் பாட்டி சொன்னாள். பாவம்! அவள் காய்ச்சலாகப் படுத்திருந்தபோது யாரும் அவளைக் கவனித்திருக்க மாட்டார்கள். பாட்டிதானே? குடும்பம் இல்லை, பிள்ளை குட்டி இல்லை. யார் கவனிக்கப் போகிறார்கள்? அதனால் அவளுக்கு நோயைக் கண்டு பயம் உண் டாகியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/41&oldid=1149556" இலிருந்து மீள்விக்கப்பட்டது