பக்கம்:புது டயரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

புது டயரி

 நோயினால் கிடைக்கிறது என்றுதானே சொல்ல வேண்டும்? அதனால்தான் அந்த நோயை நாம் வரவேற்க வேண்டும் என்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து வெளிவரும்போது ஓர் அன்பர் வந்தார். அவர் ஏதோ கேள்வி கேட்டார். நான் பதில் சொல்லும்போது ஒரு ஜோக் அடித்தேன். அதை அவர் ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார். அவர் நான் சொன்ன சிலேடைக்காக அதை எழுதினார். ஆனால் அந்தச் சிலேடையோடு, நான் மருத்துவமனையில் இருந்த செய்தியும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அன்பர்கள் சிலேடையை ரசித்தார்களோ இல்லையோ, நான் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்ததை அறிந்தார்கள். என் உடல் நிலையை விசாரித்துக் கடிதங்கள் வரலாயின. அந்தக் கடிதங்களில் அன்பர்கள் தங்கள் அன்பைக் கொட்டியிருந்தார்கள். உபதேசத்தையும் தாராளமாக வழங்கியிருந்தார்கள். மருத்துவமனையில் வந்து பார்த்தவர்களும், வீட்டில் வந்து பார்த்தவர்களும் எனக்காக மிகவும் இரங்கி, இனிமேல் நான் இப்படிச் செய்யக் கூடாது, அப்படிச் செய்யக் கூடாது என்றெல்லாம் அறிவுரை கூறினார்கள். ‘நாம் எவ்வளவு பெரிய மனிதர் ஆகிவிட்டோம் எத்தனை பேர் நம் நலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்’ என்று எண்ணி எண்ணிப் பூரித்தேன். நோய்க்கு நன்றி கூறினேன்.

அப்பர் சுவாமிகளுக்குச் சூலை நோய் வந்தது. சைவராகப் பிறந்த அவர் சைன மதத்தில் சேர்ந்து அங்கே ஆசார்ய பதவியை வகித்து வந்தார். திடீரென்று அவருக்குப் பொறுக்க முடியாத வயிற்று வலி வரவே, அவர் துடி துடித்துப் போனார். சைனர்கள் மணி மந்திர ஒளஷதங்களால் அவருடைய நோயைப் போக்க முயன்றார்கள்; நோய் நீங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/43&oldid=1149558" இலிருந்து மீள்விக்கப்பட்டது