பக்கம்:புது டயரி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோய்க்கு இடம் கொடு

37

 நோயின் துன்பம் தாங்க முடியாமல் அப்பர் சுவாமிகள் தம்முடைய தமக்கையாராகிய திலகவதியார் இருந்த திருவதிகைக்குச் சென்று அவர் காலில் விழுந்தார். அவருடன் திருக்கோயில் சென்று இறைவனைப் பணிந்து பாடினார். அவருடைய வயிற்றுவலி நீங்கியது. வயிற்றுவலி வந்ததனால்தான் மீட்டும் சிவசமயத்தை அடைந்து இறைவன் திருவருளைப் பெற முடிந்தது. அதனால், இந்த வயிற்று வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? என்று மனமுருகி அவர் கூறினார்.

எனக்கும் வயிற்றில்தான் கோளாறு உண்டாயிற்று. உணவு இறங்கவில்லை; மலச்சிக்கல் ஏற்பட்டது. அமைதியே இல்லை. அந்த நிலையில் பெங்களுரில் நடைபெற்ற அருணகிரிநாதர் ஆறாவது நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினேன். அப்போது நோய் கடுமை ஆயிற்று. சென்னைக்கு வந்தவுடன் எங்கள் குடும்ப டாக்டரிடம் காட்டினதில் அவர் உடனே மருத்துவமனையில் சேர்த்து விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிட்டார்.

எனக்கு இவ்வளவு தடபுடல் வேண்டாமென்று தோன்றியது. பேதிக்கு மருந்து சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம். எங்கள் டாக்டர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரைப் போல என்னிடம் உரிமை கொண்டாடுவார். “நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்து உடம்பைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாச் சோதனைகளும் செய்து கொண்டேயாக வேண்டும்” என்று அடித்துப் பேசினார்.

என் குடும்பத்தினர் அவருடைய உத்தரவைக் கண்டு அலந்து போனார்கள். என்னவோ, ஏதோ என்று பயந்தார்கள். எனக்கு மட்டும்,ஒன்றும் இல்லாததற்கெல்லாம் இந்த டாக்டர் ஏன் இப்படிக் கலவரப்படுத்துகிறார் என்றுதான் தோன்றியது. “மருத்துவமனைக்குப் போவது அவசியமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/44&oldid=1149559" இலிருந்து மீள்விக்கப்பட்டது